டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் 1 முதல் 29 வரை நடக்கவுள்ளது. இந்திய அணி விளையாடும் லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து டி20 உலகக்கோப்பை தொடர் மூலமாக புதிய மார்க்கெட்டை திறக்க திட்டமிட்டுள்ளது புரிய வருகிறது.
இதற்கான விளம்பரப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், விராட் கோலி தான் போஸ்டர் பாயாக இருந்து வருகிறார். இவரை பார்க்க தான் அமெரிக்கா ரசிகர்கள் அதிக விருப்பம் தெரிவித்து வருவதால், பிசிசிஐ நிர்வாகத்திற்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் 2022ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் 3 பேரும் டி20 கிரிக்கெட் பக்கமே வரவில்லை.
ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் முழு கவனத்தையும் திருப்பினர். அதேபோல் டி20 கிரிக்கெட்டுக்காக பிரத்யேக அணி உருவாக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் கட்டமைக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா இல்லையென்றாலும் அவரது இடத்தில் சூர்யகுமார் யாதவ் தான் கேப்டனாக செயல்பட்டார்.
இதனால் 2007ம் ஆண்டை போல் முழுக்க முழுக்க சீனியர் வீரர்களை ஒதுக்கி வைத்துவிட்டு இளம் வீரர்களை டி20 உலகக்கோப்பை தொடருக்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டு வந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரிடமும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர்கள் இருவரும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மும்முரமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஆஃப்கானிஸ்தான அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஒருவேளை விராட் கோலி, ரோகித் சர்மா டி20 அணியில் மீண்டும் வந்தால், இந்திய அணியின் டாப் 5யில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் கூட இருக்க மாட்டார். ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருப்பார்கள். இதன்பின் ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா இடம்பிடிக்க முடியும்.
இதனால் ஒவ்வொரு போட்டியிலும் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களையும் வீச வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் தேர்வு குழு முடிவு எடுக்க முடியாமல் திணறி வருவதாக பார்க்கப்படுகிறது. இதனால் விவகாரம் ஜெய் ஷா வரை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி இருவரையும் தேர்வு செய்யலாம்.
ஆனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்வதற்கான எந்த உறுதியையும் வழங்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் உச்சக்கட்ட ஃபார்மை வெளிப்படுத்தவில்லை என்றால், நிச்சயம் கழற்றிவிடப்பட வாய்ப்பு உள்ளதாக பார்கக்ப்படுகிறது.

