கேப்டவுன் மைதானத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி தென்னாப்பிரிக்காவின் பவுலிங் அட்டாக்கை சமாளித்து சிறப்பாக முன்னிலை பெற்றது. 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, இந்திய வீரர் விராட் கோலி – கேஎல் ராகுல் இணை களத்தில் இருந்தது. அப்போது கேஎல் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஜடேஜா மற்றும் பும்ரா டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த ஓவரிலேயே விராட் கோலி 46 ரன்களிலும், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக இந்திய அணி ஒரு ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி 6 வீரர்கள் டக் அவுட்டாகி அதிக வீரர்கள் டக் அவுட்டாகிய பட்டியலில் சாதனை செய்தனர்.
இதன் காரணமாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 98 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பின் முதல் நாளிலேயே இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் எய்டன் மார்க்ரம் – டீன் எல்கர் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் இன்னிங்ஸ் போல் அல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் சிறிது நேரம் தாக்கு பிடித்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், முகேஷ் குமார் வீசிய பந்தில் எல்கர் 12 ரன்கள் எடுத்து விராட் கோலியிடம் கேட்ச்சானார். இதன்பின் முகேஷ் குமார் துள்ளிக்குதித்து உற்சாகத்தை வெளிப்படுத்த, விராட் கோலி உடனடியாக அனைத்து இந்திய வீரர்களிடமும் விக்கெட்டை கொண்டாட வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.
அதேபோல் களத்தில் கேட்ச் பிடித்த உடனே விராட் கோலி, டீன் எல்கரை பார்த்து தலைவணங்குவதாக மரியாதை அளித்தார். அதன்பின் உடனடியாக இந்திய வீரர் சிராஜ் நேராக டீன் எல்கரிடம் சென்று வாழ்த்து கூறிய நிலையில், பின்னர் அவரிடம் சென்ற விராட் கோலி, அவரை கட்டியணைத்து வாழ்த்து கூறி வழியனுப்பினார். அதன்பின் கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் வாழ்த்து கூறினர்.
இதன்பின் ரசிகர்களை பார்த்து பேட்டை உயர்த்தியவாறு டீன் எல்கர் கடைசி முறையாக பேட்டிங் முடித்து பெவிலியன் திரும்பினார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் கிரேம் ஸ்மித்துக்கு பின், கேப்டனாக இருந்து ஓய்வு பெறும் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் டீன் எல்கர் பெற்றுள்ளார்.

