ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அவரது ஆட்டத்தை கடைசி முறையாக பார்த்து மரியாதை அளிக்க ஆஸ்திரேலியா ரசிகர்கள் தயாராகினர்.
இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்பின் இரு அணிகளும் தேசிய கீதம் பாடுவதற்காக அணி வகுத்தனர். அப்போது கடைசி முறையாக டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்குவதால், அவர் தனது 3 மகள்களுடன் தேசிய கீதம் பாட மைதானத்திற்கு வந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் உணர்வுப்பூர்வமாய் அமைந்தது. இதனை பார்த்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் டேவிட் வார்னர் மைதானத்தில் நடந்து வந்த போது, எழுந்து நின்று கைகளை தட்டி உற்சாகம் செய்தனர். அதேபோல் வழக்கமாக அணியை வழிநடத்தும் கேப்டனாக அனைத்து வீரர்களுக்கும் முன் நடந்து செல்வார்.
இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் உட்பட அனைத்து வீரர்களும் டேவிட் வார்னர் பின் அணி வகுத்து நடந்து வந்தனர். ஆஸ்திரேலியா அணிக்காக எண்ணற்ற வெற்றிகளை பெற்று கொடுத்த டேவிட் வார்னருக்கு ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தரப்பில் வழங்கப்பட்ட மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்தது.
இதன் பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தரப்பில் அறிமுக வீரர் சயீம் அயூப் – அப்துல்லா சஃபீக் இருவரும் தொடக்கம் கொடுத்தனர். அதில் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே அப்துல்லா சஃபீக் டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, தொடர்ந்து ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரின் 2வது பந்தில் அறிமுக வீரர் சயீம் அயூப் டக் டவுட்டாகி வெளியேறினார்.
இதனால் பாகிஸ்தான் அணி 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. பின்னர் கேப்டன் ஷான் மசூத் – பாபர் அசாம் இருவரும் இணைந்தனர். ஆஸ்திரேலியா பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட பாபர் அசாம், சிறப்பாக சில பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதனால் அவர் ஃபார்முக்கு வந்ததாக பார்க்கப்பட்டது.
ஆனால் கம்மின்ஸ் வீசிய பந்தில் எல்பிடபில்யூ முறையில் வெறும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த டெஸ்ட் தொடருக்கு முன் பேட் கம்மின்ஸிடம் பாபர் அசாம் ஒருமுறை கூட வீழ்ந்ததில்லை. ஆனால் நடப்பு டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் கம்மின்ஸ் பந்துவீச்சில் 3வது முறையாக வெளியேறியுள்ளார்.

