இந்திய அணியின் வீரர்கள் தேர்வு மற்றும் கம்பீரின் முடிவுகள் குறித்து முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக, வெளிநாட்டுத் தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என்ற விவாதத்தை அவர் முன்வைத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், இந்திய அணியின் தேர்வு குறித்து அஸ்வின் சில முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். முந்தைய வெளிநாட்டுத் தொடரில் 500 ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜா தற்போது விளையாடாமல் வெளியே அமர்ந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், பும்ரா இல்லாத நேரத்தில் இங்கிலாந்து தொடரைச் சமன் செய்ய முகமது சிராஜ் முக்கியப் பங்காற்றியதையும் நினைவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து அஸ்வின் கூறும்போது, சிராஜை அணியிலிருந்து நீக்கிவிட்டு காயத்திலிருந்து திரும்பிய பிரசித் கிருஷ்ணாவுக்கும், ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட அன்ஷுல் கம்போஜுக்கும் வாய்ப்பு வழங்கியிருப்பது எந்த வகையில் சரியான முடிவு என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுபோன்ற முடிவுகளை அணியின் பிடிவாதமாகவே பார்க்க வேண்டியுள்ளது என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

