கேப்டன் பதவி கிடைக்காததற்கு தோலின் நிறம்தான் காரணம் – கவாஜாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த பாட் கம்மின்ஸ்!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு தனக்குக் கிடைக்காததற்கு தனது தோலின் நிறமும் பாகிஸ்தான் பூர்வீகமும் ஒரு காரணம் என்று உஸ்மான் கவாஜா கூறியிருந்த நிலையில், அதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் தற்போதைய கேப்டன் பாட் கம்மின்ஸ்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவாஜா, தனது சுயசரிதையான ‘Sabr’ புத்தகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் குறித்து எழுதியுள்ளார். குறிப்பாக, 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, இடைக்கால கேப்டனாகத் தான் நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ஆனால், அந்தப் பொறுப்பு டிம் பெய்னுக்கு வழங்கப்பட்டது. அப்போது குயின்ஸ்லாந்து அணியின் கேப்டனாகவும் இருந்த கவாஜா, தனக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் இருந்ததாகக் கூறியுள்ளார். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடனான ஊதியப் பிரச்சினைகளில் தான் முன்பு தீவிரமாகப் பேசியது ஒரு காரணம் என்றும், மற்றொரு முக்கியமான காரணம் தனது பூர்வீகமும் தோலின் நிறமும் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக, பழமைவாத எண்ணம் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், அந்த நேரத்தில் பழுப்பு நிறத் தோலைக் கொண்ட ஒருவரை நாட்டின் கேப்டனாக ஏற்கத் தயாராக இருக்கவில்லை என்பதே தனது நம்பிக்கை என்று கவாஜா புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கம்மின்ஸ் கொடுத்த பதில் என்ன?

- Advertisement -

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சிட்னியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட் கம்மின்ஸ், கவாஜாவின் கருத்தை ஏற்க மறுத்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அவர், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பு ஒருவருடைய தோலின் நிறத்தைப் பொறுத்து வழங்கப்படுகிறது என்று கூறுவது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டு என்றும், அப்படிக் கூறுவதற்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தோலின் நிறம் அவசியம் என்ற கருத்தைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கவாஜாவுடன் பல விஷயங்களில் தனக்கு உடன்பாடு இருந்தாலும், இந்த விவகாரத்தில் அவருடைய கருத்தைத் தான் முழுமையாக மறுப்பதாகவும் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு ஸ்மித் நீக்கப்பட்ட பிறகு டிம் பெய்ன் இடைக்கால கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2021ஆம் ஆண்டு அந்தப் பொறுப்பை கம்மின்ஸ் ஏற்றார். தற்போது கவாஜாவின் சுயசரிதையில் இடம்பெற்றுள்ள இந்தக் கருத்துகள், அப்போதைய கேப்டன் தேர்வு குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles