நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மா 45 பந்துகளில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். போட்டிக்கு பிறகு அவர் சதம் அடித்தது எப்படி என்று பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் மிகவும் மெதுவாக ஆரம்பித்த அவர் கடைசி 23 பந்தில் மட்டும் 81 ரன்கள் குவித்தார். அவருக்கு இது ஐபிஎல் தொடரில் முதல் சதமாக அமைந்தது. மேலும் மும்பை அணிக்கு தேவையான நேரத்தில் இந்த சதம் வந்திருக்கிறது.
இது குறித்து திலக் வர்மா பேசும் போது “எப்பொழுதுமே முதல் சதம் மிகவும் முக்கியமானது. இந்த முறை இந்த சதம் எங்கள் அணிக்கும் மிகவும் முக்கியமாக இருந்தது. நான் கடந்த போட்டிகளில் அதிக நேரம் கிரிசில் செலவு செய்யவில்லை. எனவே இந்த போட்டியில் கொஞ்ச நேரம் என்னை செட்டில் செய்து கொள்ள நினைத்தேன்”
“நான் 20 பந்துகள் விளையாடிய பிறகு என் திறமையை நம்பி அடித்து விளையாட ஆரம்பித்தேன். அழுத்தமான நேரத்தில் நாம் நம்முடைய திறமையை நம்ப வேண்டும். அதே சமயத்தில் என்னிடம் பல ஸ்டைலான ஷாட்டுகள் இருக்கிறது. அதை தேவைப்படும் நேரத்தில் அணிக்காக கொண்டு வருவேன்” என்று கூறி இருக்கிறார்.

