இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். முதலில் இரு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட மாட்டார் என்ற தகவல் வெளிவந்தது. பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் விலகி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ள உலகக் கோப்பை டி20 தொடரில் விராட் கோலி விளையாடுவாரா? என்பது சந்தேகத்தையே எழுப்புகிறது. விராட் கோலி சரியாக 14 மாதங்கள் கழித்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் மட்டுமே விளையாடினார். கடைசியாக விராட் கோலி 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் விளையாடினார்.
அதன் பிறகு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார். இதனால் அவர் டி20 தொடர்களில் இனி பங்கேற்க போவதில்லை என்ற வியூகம் கிளம்பியது. ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இதனால் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பாரா? இல்லையா? என்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் பிசிசிஐ தலைவரான ஜெயிஷா இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது போட்டி தொடங்குவதற்கு முன்பாக பிப்ரவரி 14ஆம் தேதி அன்று சௌராஷ்டிரா கிரிக்கெட் மையத்திற்கு நிரஞ்சன்ஷா என பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது விராட் கோலி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஜெய்ஷா பதில் அளிக்கும் விதமாக
“15 ஆண்டுகளில் ஒரு வீரர் விடுப்பு கேட்பது அவரவர் உரிமை. விராட் கோலி காரணமில்லாமல் விடுப்பு எடுக்க மாட்டார். எனவே அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும். டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா என்பது பற்றிக் கேட்கிறீர்கள். அது பற்றி விவாதிப்போம்” என்று முடித்தார். இதனால் விராட் கோலி உலக கோப்பையில் விளையாடுவாரா? அல்லது விளையாட மாட்டாரா? என்பது குறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை.
இருப்பினும் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விராட் கோலி நிச்சயம் விளையாடுவார். டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்தவரின் பட்டியலில் விராட் கோலியே முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 4000 ரன்கள் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே அவரது வருகை இந்திய அணிக்கு நிச்சயம் மிகப்பெரிய பலத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.

