ஐ.பி.எல் தொடரில் இன்று மிகவும் இளமையான வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார். கடந்த போட்டியில் காயமடைந்து பாதியிலேயே வெளியேறிய கேப்டன் சஞ்சு சாம்சன் பதிலாக இன்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் இவருக்கு விளையாட வாய்ப்புக் வழங்கப்பட்டுள்ளது.
டாஸ் வென்று லக்னோ முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 180 ரன்கள் குவித்தது. மார்க்கரம், பதோனி இருவரும் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்த போதிலும் 19 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சந்தீப் ஷர்மா வீசிய கடைசி ஓவரில் அப்துல் சமத் 4 சிக்சர்கள் பறக்கவிட்டு 10 பந்துகளில் 30 ரன்கள் விளாசி அணியை 180 வரை அழைத்துச் சென்றார்.
பின்னர் இலக்கை துரத்த ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினார். தான் சந்தித்த முதல் பந்திலேயே 80 மீட்டர் பெரிய சிக்சர் விளாசி அனைவரின் வாயையும் பிளக்க வைத்தார். இவ்வளவு பிரம்மாண்ட தொடரில், அதுவும் பள்ளிச் செல்லும் வயதில் முதல் பந்தையே எல்லைக்கு வெளியில் தூக்கிச் சொறுகியுள்ளார். இதான் இளம் இரத்தம். அடுத்த ஓவரில் ஆவேஷ் கான் வேகப்பந்தில் மற்றுமொரு சிக்சர்.
மொத்தமாக 2 பவுண்டரி, 3 சிக்சர் என 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்த போது, துரதிஷ்டவசமாக மார்க்ரம் ஸ்பின்னில் ரிஷப் பண்ட்டின் துல்லியமான ஸ்டம்ப்பிங்கில் ஆட்டமிழந்தார். அவுட் ஆகி பெவிலியன் திரும்பும் போது, ஹெல்மெட்டை கழற்றி கண்ணீரைத் துடைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. இந்த இளம் குழந்தை வீரர், முதல் போட்டியில் அரை சதம் மிஸ் ஆனதற்கு கண்ணீர் விட்டுள்ளார் போல.
சூர்யவன்ஷி அடித்த ஷாட்களைப் பார்த்து, இவர் உண்மையில் 14 வயதா எனச் சந்தேகப்பட்டவர்கள் கூட இவரின் அழுகையைப் பார்த்து சின்னப் பையன் தான் என நகைச்சுவையாக கன்பார்ம் செய்துள்ளனர். இந்த இளம் இரத்தம் உள்ளூர் போட்டிகளில், யு – 19 என அதிரடி சிக்ஸர்கள் விலாசியதோடு நிறுத்தாமல், மிகப் பெரிய லீகில் அதனைத் தொடர்ந்து அவரின் பசியைக் காட்டியுள்ளார். நிச்சயம் பெரிய பேட்ஸ்மேனாக வருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

