ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை ஹீரோ டிராவிஸ் ஹெட் ஏன் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறார் என்பது குறித்த கேள்விக்கு, தற்போது ட்ராவிஸ் ஹெட் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில், ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் இறுதிப்போட்டியில் தனது சிறப்பான பங்களிப்பினை அளித்தார்.
இறுதிப் போட்டியின் இக்கட்டான நிலையில் தொடக்கத்தில் நிதானமாக ஆடிய அவர் பின்னர் அதிரடியாக விளையாடி வெற்றியை ஆஸ்திரேலியாவின் பக்கம் திருப்பினார். அவரின் இந்த அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலியா அணி அவருக்குக் காயத்தின் போது மாற்று வீரரைத் தேடாமல் காயம் சரியாகும் வரை அவருக்காகக் காத்திருந்தது சரிதான் என உறுதிப்படுத்தியது.
அவர் இறுதிப் போட்டியில் 120 பந்துகளில் 137 ரன்களைக் குவித்தது கோப்பையை வெல்ல முக்கியப் பங்காற்றியது. ஆனால் அவர் உலகக் கோப்பை கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் விளையாடிக் கொண்டிருப்பது குறித்து பல முன்னாள் கிரிக்கெட் நிபுணர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
உலகக்கோப்பை முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் தொடங்கியது. ஆனால் இந்த தொடர் டிராவிஸ் ஹெட்டிர்க்கு ஓய்வளிக்காமல் விளையாட வைப்பது நேரத்தை வீணடிப்பதாகும் என்பது போல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
தற்போது கிளப் ப்ரேரி ஃபயர் என்ற டிவிட்டர் பக்கத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஆடம் கில்கிரிஸ்ட், ஹெட்டிடம் “உலக கோப்பையை வென்ற ஹீரோ நீங்கள். பின்னர் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருப்பதற்கு என்ன தவறு செய்தீர்கள்” என்பது போல் ஒரு கேள்வியை எழுப்பினார்.
அதற்க்கு பதிலளித்த ஹெட்
“கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நான்கு வாரங்கள் வீட்டில் இருந்தேன்.
வீட்டில் சிறிது நேரம் செலவிடுவது பாக்கியம். ஆனால் டி20 உலகக் கோப்பைக்கு முன்னர் எங்களுக்கு அதிக நேரம் இல்லை.
எங்களுக்கு சிறிது காலமே உள்ளது. நான் இன்னொரு உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறேன். இந்தத் தொடர் எனக்கு உலகக் கோப்பையில் பங்கேற்க ஒரு நல்ல வாய்ப்பாகும். இது தொடக்க வீரராக களமிறங்க எனக்கு வாய்ப்பளிக்கிறது” என்று கூறினார்.
ஆஸ்திரேலியா அணி 2021ல் டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தது. தற்போது 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றுள்ளது. அனைத்து ஐசிசி தொடர்களையும் வென்றுள்ள அணி ஆஸ்திரேலியாவாகும்.

