கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த மெகா ஏலத்தில் ரூ.9.75 கோடிக்கு வாங்கப்பட்ட அஸ்வின், 9 போட்டிகளில் மட்டுமே ஆடினார். இதன்பின் அஸ்வினை விடுவிக்க சிஎஸ்கே அணி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியது.
அஸ்வின் ஓய்வு
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை டிரேட் மூலமாக வாங்கிவிட்டு அஸ்வினை கொடுக்க சிஎஸ்கே அணி தயாராகி வந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்ததோடு, வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட முடிவு எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதனால் எஸ்ஏ20 லீக் தொடரில் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஸ்வினுக்கு சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் பிரியாவிடை அளித்து வருகின்றனர். சிஎஸ்கே அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அஸ்வின் குறித்த நினைவுகளை பகிரப்பட்டு வருகிறது. சோசியல் மீடியாவில் ஆஸ் அண்ணா என்ற டேக்கை ரசிகர்கள் தொடர்ச்சியாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் அஸ்வின் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் வாழ்த்து
இந்த சூழலில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அஸ்வினுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதில் ருதுராஜ் கெய்க்வாட், ஓஜி சிஎஸ்கே அணியில் நீங்கள் விளையாடுவதை பார்த்துவிட்டு, மீண்டும் சிஎஸ்கே அணியில் உங்களுடன் விளையாடியது மிகப்பெரிய பெருமை அளிக்கிறது. உங்களுடன் ஓய்வறையை பகிர்ந்து கொண்டது வாழ்வில் எனக்கு கிடைத்த கவுரவம் அஸ்வின் அண்ணா என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக அஸ்வின் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்றும், பிராவோவை போல் அஸ்வினுக்கு மிகப்பெரிய மரியாதையை அளிக்க சிஎஸ்கே அணியின் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

