குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது போட்டியில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட குஜராத் அணியின் சாய் சுதர்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற இப் போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 168 ரன்கள் குவிக்க, அந்த இலக்கினை கடக்க முடியாமல் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று முதல் போட்டியில் தோல்வியடைந்து இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
கேப்டன்சியில் இருந்து இன்னும் விலக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்காத ரோஹித் சர்மா அதிருப்தியுடனே முதல் போட்டியில் பங்கு பெற்றார். இருப்பினும் போட்டியின் போது ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மாவிடம் ஆலோசனை பெரும் காட்சிகளையும் பார்த்தோம். ரோகித் சர்மாவும் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்க, அதில் சிலவற்றை மட்டுமே ஏற்றுக் கொண்டு பெரும்பாலும் அவராகவே மாற்றங்களை செய்து இருக்கிறார்.
போட்டியின் ஒரு நிகழ்வில் ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்க, அப்போது ஹர்திக் பாண்டியா ஆலோசனையின் போது பாதியில் இருந்து வெளியேற பும்ரா அதனை ரோகித் சர்மாவிடம் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் அணி வீரர்களுக்குள்ளேயே விரிசல் இருப்பது தற்போது ரசிகர்களுக்கே தெளிவாக தெரிகிறது. ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆக்கப்பட்டது அணி வீரர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை என்பது இப்போட்டியின் மூலம் நிரூபணம் ஆகிறது. மேலும் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது.
தோல்விக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மாவை சமாதானப்படுத்தும் விதமாக கட்டிப்பிடிக்க, ரோஹித் சர்மா அதிலிருந்து விலகி ஹர்திக் பாண்டியாவை தோல்விக்கான காரணங்களை சுட்டிக்காட்டி திட்டியுள்ளார். அவற்றைப் பொறுமையாக ஹர்திக் பாண்டியா கேட்டுக்கொண்டார். இதனால் முதல் போட்டியிலேயே அவரது கேப்டன்சி குறித்து சில விவாதங்கள் எழத் தொடங்கி இருக்கிறது.
எனவே பின்வரும் போட்டிகளில் மூத்த வீரர்களின் அனுபவங்களை பெற்று அணியை வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கலாம். குஜராத் அணியில் இருந்த போது மிகவும் கூலாக கேப்டன்ஷி பொறுப்பை ஏற்று வழி நடத்திய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் சில நெருக்கடிகளுக்குள் சிக்கி இருக்கிறார் என்பதும் கண்கூடாக தெரிகிறது.
இனியும் ஹர்திக் பாண்டியா தன்னிச்சையாகவே முடிவெடுத்து செயல்படுத்தினால் அணிக்குள் விரிசல் ஏற்படும். எனவே இந்த பிரச்சனைகளை கடந்து வெற்றிகரமான கேப்டனாக மும்பை அணிக்கு இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மும்பை அணி வருகிற புதன்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

