கிரிக்கெட் போட்டி வளர வளர அதன் நவீன தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. கிரிக்கெட்டை பொருத்தவரை தொழில்நுட்பம் வளர்வதற்கு முன்னால் களத்தில் இருக்கும் மூன்றாவது நடுவரின் தீர்ப்பு மட்டுமே இறுதியானது.
மூன்றாவது நடுவரின் தீர்ப்பை இறுதியானது என்றாலும், அதனை எதிர்த்து அணிவீரர்கள் வாதிடுவதும், சண்டையிடுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் அவற்றைத் தவிர்க்கவே புதிய புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கேமராக்களை வைத்து கிரிக்கெட் போட்டிகளை கண்காணிக்க தொடங்கினர். ஆட்டக் களத்தில் வீரரோ அல்லது நடுவரோ யார் என்ன தவறு செய்தாலும் கேமராவில் பதிவாகி வந்தது.
தற்போதுள்ள நவீன கிரிக்கெட்டில் சிறு அசைவு நிகழ்ந்தால் கூட அது துல்லியமான கேமராக்களின் மூலம் தெரிந்து விடுகிறது. தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் ரீப்ளை சிஸ்டம் மூலம் மைதானத்தில் 8 கேமராக்கள் பொருத்தப்பட்டு மைதானத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் படம் பிடித்து வந்தது.
இதற்கு முன்னர் மூன்றாவது நடுவரிடம் அவுட் அல்லது அவுட்டை எதிர்த்து அப்பீல் செய்தால் அதற்காக சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டி வரும். மூன்றாவது நடுவரும் கேமரா தொழில் நுட்பமும் வேறு வேறு அறைகளில் இருப்பதால் முடிவுகள் தெரிய சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட் ரீப்ளை சிஸ்டம் தொழில்நுட்பத்தின் முடிவுகள் சில வினாடிகளிலேயே கிடைத்து விடுகிறது. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பொதுவாக பேட்ஸ்மேன்களின் ஆட்டம் என்றுதான் அழைக்கப்பட்டது.
தற்போது ஐபிஎல் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதியினால் பவுலர் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீசிக் கொள்ள முடியும். இதனால் ஆட்டம் ஒரு சாரார் சாதகமாக அமைவது இல்லாமல் இரு தரப்பினருக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. இவற்றைத் தொடர்ந்து தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு பவுலர் ஒரு பேட்ஸ்மேனுக்கு இடுப்புக்கு மேல் பந்தை வீசினால் அது நோபாலா? இல்லையா? என்று பொதுவாகவே கணக்கிடப்படும். இதனால் சில சர்ச்சைகளும் சந்தேகங்களும் எழுந்து வந்த நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதியின் படி ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து வீரர்களின் முழு உயரம் மற்றும் இடுப்பு உயரத்தை கணக்கிட பிசிசிஐ செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விபரங்களை டிவி தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் ஹாக் ஐ தொழில்நுட்பத்துடன் இணைத்து விட்டால் ஒவ்வொரு பேட்ஸ்மேனின் உயரத்தை வைத்து அது நோபாலா? இல்லையா? என்று மூன்றாவது நடுவரால் துல்லியமாக கணக்கிட முடியும்.
2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே விளையாடிய போது பென்ஸ்டோக்ஸ் வீசிய பந்து சிஎஸ்கே வீரர் சான்ட்னரின் இடுப்புக்கு மேல் செல்ல அதை கணித்த கள நடுவர் அவரது உயரத்தை அளவீடு செய்து இது நோபால் இல்லை என்று அறிவித்தார். இதனால் ஆவேசமடைந்த மகேந்திர சிங் தோனி களத்திற்கு சென்று அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

