அண்மையில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்களே காரணமாக அமைந்தனர். அதிலும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இந்திய அணி ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஆனால் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டி நடைபெற்றது. அதில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகியதால், வேறு வழியின்றி சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். முதல் முறையாக அந்த தொடரில் தான் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை வழிநடத்தினார்.
அந்த டி20 தொடரை 4-1 என்ற கைப்பற்றிய சூர்யகுமார் யாதவ், இளம் வீரர்களை எந்த அழுத்தமும் இல்லாமல் வழி நடத்தியது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றது. அதன்பின் அண்மையில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் சூர்யகுமார் யாதவே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
அதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமனில் முடிவடைந்தது. இந்த தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் விளாசியதால், சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார். கடைசி டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
அவரால் மைதானத்தில் இருந்து நடக்கவே முடியாமல் திணறிய போது, இந்திய அணி வீரர்களை அவரை ஓய்வறைக்கு தூக்கி சென்றனர். அதன் பின் பரிசளிப்பு விழாவின் போது சூர்யகுமார் யாதவால் நடக்க முடிந்ததால், அவரே நேரில் வந்து கோப்பையை பெற்று கொண்டார். இதனால் சூர்யகுமார் யாதவிற்கு ஏற்பட்ட காயம் சிறியதாக பார்க்கப்பட்டது.
ஆனால் மருத்துவ பரிசோதனையில் சூர்யகுமார் யாதவிற்கு காலில் கிரேட் 2 வகையிலான காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் 7 வாரங்களுக்கும் அதிக நாட்கள் சூர்யகுமார் யாதவ் ஓய்வில் இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்க முடியாது என்று பார்க்கப்படுகிறது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கம்பேக் கொடுப்பார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். அவர் கம்பேக் கொடுக்கும் நேரத்தில் சூர்யகுமார் யாதவ் காயமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

