நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து கொல்கத்தா அணியின் கேப்டன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்தது. இந்த மெகா இலக்கை குவித்து விட்டு எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்றே கொல்கத்தா அணி நினைத்திருக்கும்.
கொல்கத்தா அணிக்கு அதிகபட்சமாக பில் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்கள், மற்றொரு தொடக்க ஆட்டக்கார சுனில் நரேன் 32 பந்துகளில் 71 ரன்களும் குவித்தனர். பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பத்து பந்துகளில் 28 ரன்கள் குவித்தார் இதில் மூன்று சிக்சர்களும் அடங்கும். பின்னர் 262 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது.
அந்த அணிக்கு வழக்கத்திற்கு மாறாக தொடக்கம் இந்த போட்டியில் மிகச் சிறப்பாகவே அமைந்தது. பவர் பிளேவிற்குள் 93 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, 54 ரன்கள் குவித்த நிலையில் பிரபு சிம்ரன் ஆட்டம் இழந்து வெளியேற அதற்குப் பிறகு சசாங்க் சிங் உடன் பேர்ஸ்ட்டோ உடன் கூட்டணி அமைத்தார். இந்த ஜோடி அட்டகாசமாக கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுரமும் சிதறடித்து வெற்றிக்கு வழி வகுத்தது.
சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோ 48 பந்துகளில் ஒன்பது சிக்ஸர்களுடன் 108 ரன்கள் குவிக்க, மற்றொரு ஆட்டக்காரரான சஷாங்க் சிங் 28 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் குவித்தார். 261 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பொழுது சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது
” டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்யும் அணியிடம் 262 ரன்கள் கொடுத்தால் கண்டிப்பாக எடுத்துக் கொள்வார்கள். எங்கள் அணியில் சால்ட் மற்றும் சுனில் நரேன் அபாரமாக பேட்டிங் செய்தார்கள். இரண்டு அணிகளுமே சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என்றே கூற வேண்டும். இந்த போட்டியில் எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிய உட்கார்ந்து ஆலோசிக்க வேண்டும்.
260 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியாததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அடுத்த போட்டியில் ஆடுகளத்தையும் சூழ்நிலையும் நன்கு உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் களமிறங்க வேண்டும். சுனில் நரேன் இன் பேட்டிங் அபாரமாக இருந்தது இதை அவர் அயனி வரும் போட்டியிலும் தொடர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

