தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ள 2027-ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஆண்கள் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில், மரபுவழி எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் (Group) இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டும் இப்போட்டியை உறுதிசெய்யும் வகையில், தொடரின் முதல் சுற்றின் வடிவமைப்பு திட்டமிடப்பட்டு வருகிறது.
மொத்தம் 14 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பைத் தொடர், புதிய போட்டியமைப்பின்படி பல கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. தகுதிச்சுற்றுப் போட்டிகளுக்குப் பிறகு, பிரதான 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடும். இந்த லீக் சுற்றில்தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் சிறந்த நான்காவது இடம் பிடிக்கும் ஒரு அணி என மொத்தம் 7 அணிகள் ‘சூப்பர் 7’ (Super 7) சுற்றுக்குத் தகுதிபெறும். இதனால் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றிலும், பின்னர் ‘சூப்பர் 7’ சுற்றிலும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது.
அரசியல் பதற்றங்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பைத் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன. 2027 அக்டோபரில் தொடங்கவுள்ள இந்த தொடரின் முழுமையான போட்டி அட்டவணை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

