ஷுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, அவரது பேட்டிங்கை மட்டுமின்றி கேப்டன்சி திறனையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர். குறிப்பாக, குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் இந்த ஆண்டு அவர் சிறப்பாக அணியை வழிநடத்திய நிலையில், இந்திய அணியிலும் தனது கேப்டன்சி திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், கில்லின் கேப்டன்சி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். கில் கேப்டனாக செயல்படுவது நாளுக்கு நாள் முன்னேறி வருவதாக கூறிய அவர், ஆரம்பத்தில் தனது மனதில் சில சந்தேகங்கள் இருந்ததாகவும், தற்போது அவரது கேப்டன்சி தன்னை மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பார்க்க வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அஷ்வின் கூறும்போது, “அவரது கேப்டன்சியும் நாளுக்கு நாள் சிறப்பாகி வருகிறது. எனது மனதில் சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால், அவரை பாராட்ட வேண்டும். அவரது கேப்டன்சி இவ்வளவு உயர்ந்திருப்பது என்னை மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் ஆக்கியுள்ளது. இந்த ஆண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் சிறப்பாக வழிநடத்தினார்; இந்திய அணியிலும் அதை வெளிப்படுத்தி வருகிறார். அடுத்த தலைமுறை இந்திய பேட்ஸ்மேன்களில் கில் ஒரு முழுமையான பேட்ஸ்மேன். அவருக்கும் மற்றவர்களுக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருக்கிறது. அவர் அவ்வளவு சிறப்பானவர். போதுமான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், எதிர்காலத்தில் விராட்டுக்கு நெருக்கமாக அவர் வருவார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கில்லுக்கு, ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து சற்று சந்தேகம் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் அவருக்கு மிகவும் பொருத்தமானது. ஆனால் விராட் விளையாடிய காலத்தைப் போல இனி ஒருநாள் போட்டிகள் அதிகமாக நடைபெறாமல் போகலாம். அது துரதிர்ஷ்டவசமானது” என்று நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

