இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முதல் போட்டியைப் போலவே இரண்டாவது போட்டியிலும் சிவம் தூபே அபாரமாக விளையாடி ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார்.
இந்தூர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் மற்றும் ஜர்தான் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் அதற்குப் பின்னர் களம் இறங்கிய குல்பதின் சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 57 ரன்களைக் குவித்தார். பின்னால் வந்த வீரர்கள் தங்கள் பங்குக்கு சிறிதளவு ரன்களைக் குவிக்க இறுதியில் ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணித் தரப்பில் அர்ஸ்தீப் சிங் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரவி பிஷ்ணாய் இரண்டு விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிவம் துபே மூன்று ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
பிறகு ரன் கணக்கைத் துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சிறிது ஏமாற்றத்தை அளித்தது. கேப்டன் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலையே பரூக்கி ஓவரில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி இரண்டாவது போட்டியில் அதிரடியாக விளையாடினார். 16 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் குவித்து நவீன் உல் ஹக்கின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் உடன் 68 ரன்கள் குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே முதல் போட்டியைப் போலவே இப்போட்டியிலும் அதிரடியாக விளையாடினார். அனைத்து பந்துகளையும் அடிக்க விரும்பாமல் தனக்கு ஏதுவான பந்துகளை மட்டுமே சிக்ஸருக்கு விளாசினார்.
ஆட்டத்தின் பத்தாவது ஓவரை ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் முகமது நபி வீச, அதனை சிவம் துபே எதிர்கொண்டார். அவர் சந்தித்த முதல் மூன்று பந்துகளையும் ஹாட்ரிக் சிக்ஸர்களாக விளாசினார். அப்பொழுதே இந்திய அணியின் வெற்றி சற்று உறுதியாகிவிட்டது. சிவம் துபே 32 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ஐபிஎல்இல் சென்னை அணிக்காக விளையாடும் இவரின் அதிரடியைக் கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரில் நடைபெறுகிறது.
Up, Up and Away!
— BCCI (@BCCI) January 14, 2024
Three consecutive monstrous SIXES from Shivam Dube 🔥 🔥🔥#INDvAFG @IDFCFIRSTBank pic.twitter.com/3y40S3ctUW

