தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜோபர்க் அணியின் கேப்டன் டூ ப்ளஸிஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 29 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் களம் இறங்கிய சூப்பர் ஜெயின்ஸ் அணி விரைவாக முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்த போதும் மிடில் ஆர்டரில் கைகோர்த்த ஸ்மர்ட்ஸ் மற்றும் மல்டர் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர்.
ஸ்மர்ட்ஸ் 34 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் என 55 ரன்கள் குவித்து பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். மல்டர் அதிரடியாக விளையாடி 59 ரன்களில் வில்லியம்சின் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய கிளாசன் 16 பந்துகளில் மூன்று பவுண்டரி மூணு சிக்ஸர் என விளாசி 40 ரன்களைக் குவித்தார். இதனால் சூப்பர் ஜெயின்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.
பின்னர் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக அருமையான தொடக்கம் கிடைத்தது. தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் டு பிளஸிஸ் சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர் என 57 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டூப் பிளசிஸ் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் குவித்து நூர் அகமதின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மேட்சன் 44 ரன்களும், மொயின் அலி 12 பந்துகளில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என 26 ரன்கள் குவித்து ஜோபர்க் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 209 ரன்கள் குவித்து சிறப்பாக வெற்றி பெற்று அரை இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை உறுதி செய்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியின் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்து போனது. இரு அணிகளும் தலா மூன்று வெற்றிகளைப் பெற்றிருக்கும் நிலையில் புள்ளிகளின் அடிப்படையில் ஜோபர்க் அணி முன்னிலை பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. ஐபிஎல் இல் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடும் முன்னாள் வீரர் டுபிளசிஸ் மற்றும் தற்போதைய வீரர் மொயின் அலி ஆகியோரே இப் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்து மும்பை அணியின் அரையிறுதி வாய்ப்பை தகர்த்தனர்.

