இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி இருக்கிறது. இதன் முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற பிறகு சென்னை அணி வீரர் சமீர் ரிஸ்வியின் செயல்பாடு பார்ப்பவர்களின் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
சென்னை அணியின் சார்பில் மகேந்திர சிங் தோனி ரசிகர்களும், பெங்களூர் அணியின் சார்பில் விராட் கோலி ரசிகர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் நிரம்பி வழிந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 173 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துவிட்டு மீண்டும் பெங்களூர் அணியில் இணைந்த விராட் கோலியின் வருகை ஆர்சிபி அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரிய உத்வேகத்தை கொடுத்தது. விராட் கோலி கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியிருந்தார்.
அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய அவர் சிறிது காலம் ஓய்வெடுத்து விட்டு, ஐபிஎல் தொடருக்காக பெங்களூர் அணியில் இணைந்துள்ளார். தனது முதல் போட்டியில் விளையாடிய அவர் 21 ரன்கள் குவித்தார். சிறிது நேரமே களத்தில் நின்றிருந்தாலும் அவரது வருகை அணிக்கு பெரிய எனர்ஜியாக அமைந்துள்ளது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 176 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. போட்டியை முடித்துவிட்டு இரு அணி வீரர்களும் நட்பினை வெளிப்படுத்தும் வகையில் கை குலுக்கி விட்டு செல்வது வழக்கம். அவ்வாறு கைகுலுக்க மகேந்திர சிங் தோனியின் பின்னால் இருந்த சென்னை அணி வீரர் சமீர் ரிஸ்வி விராட் கோலியினைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக தான் அணிந்திருந்த தொப்பியைக் கழட்டிவிட்டு அவருடன் கைகுலுக்கிய பிறகு மீண்டும் தனது தொப்பியை அணிந்தார்.
உலகத்தில் பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக திகழும் விராட் கோலி, கிரிக்கெட்டின் தற்போதைய ஜாம்பவானாகவே திகழ்கிறார். ஒரு தலை சிறந்த வீரரைப் பார்த்ததும் சமீர் ரிஸ்வி செய்த செயலைக் கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் போட்டிக்கு பிறகு சமீர் ரிஸ்வி விராட் கோலி உடன் எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள பெங்களூர் அணி வருகிற திங்கட்கிழமை பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கைக் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sameer Rizvi especially removed his cap while shaking hands with kohli. ❤️
— leisha (@katyxkohli17) March 23, 2024
pic.twitter.com/1W92yqzwkl

