ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகி இருக்கிறார். ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களுடன் நடந்த ஆலோசனையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.
பின்னணி என்ன?
சஞ்சு சாம்சனும் இதனை சில நேர்காணல்களில் ஒப்புக் கொண்டிருக்கிறார். சஞ்சு சாம்சனை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவை ராஜஸ்தான் அணியின் நிர்வாகம் எடுத்ததால், வேறு வழியின்றி இந்த முடிவை எடுக்க தள்ளப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் குறித்த ஆலோசனை நடைபெற்று இருக்கிறது.
அப்போது ராகுல் டிராவிட், இளம் நட்சத்திர வீரரான ஜெய்ஸ்வாலின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். ஆனால் ராஜஸ்தான் அணியின் நிர்வாகமோ ரியான் பராக் பெயரை பரிந்துரை செய்திருக்கிறது. ஜெய்ஸ்வால் ஏற்கனவே இந்திய அணியின் நிரந்தர வீரராக மாறிவிட்ட நிலையில், அவர் தலைமையில் அணியை கட்டமைக்கலாம் என்றும் ராகுல் டிராவிட் ஆலோசனை கூறி இருக்கிறார்.
ரியான் பராக் காட்டில் மழை
ஆனால் ரியான் பராக்கை மட்டுமே கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பதில் ராஜஸ்தான் உரிமையாளர்கள் பிடிவாதம் காட்டி இருக்கின்றனர். இதற்கு ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ரஞ்சித் பர்தாகூர் முக்கிய காரணம். அவரின் தம்பி மகன் தான் ரியான் பராக். இதனாலேயே ரியான் பராக்கை 17 வயதிலேயே ராஜஸ்தான் அணி ஏலத்தில் வாங்கி வாய்ப்பு அளித்தது.
தற்போது அவரை கேப்டனாக்கி அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் விரும்பி இருக்கிறார். இதற்கு ராகுல் டிராவிட் ஒப்புதல் கொடுக்கவில்லை. இதனால் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். இதன்பின் சஞ்சு சாம்சனும் விலகும் முடிவை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் ரீடென்ஷன் பட்டியலின் போது இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

