இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதற்கு பின் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் இழந்து 264 ரன்களை சேர்த்தது. பின் 2ஆவது நாள் ஆட்டம் இன்று மீண்டும் தொடங்கியது.
டாப்பில் ரிஷப் பண்ட்
பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரின் அபாரமான பவுலிங் காரணமாக இந்திய அணி 358 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்த போட்டியில் காயத்துடன் ஆடிய ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி 54 ரன்களை சேர்த்தார். இன்றைய ஆட்டத்தில் 17 ரன்கள் மட்டுமே எடுத்த ரிஷப் பண்ட் அரைசதம் கடந்து பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.
அதனடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை முந்தி அசத்தி இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 40 போட்டிகளில் விளையாடி 2,716 ரன்களை விளாசியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
ரிஷப் பண்ட் சாதனை
இன்றைய ஆட்டத்தில் 40 ரன்களை எடுத்தபோது ரிஷப் பண்ட் ரோகித் சர்மா சாதனையை முறியடித்தார். 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,717 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அதிலும் 6 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களும் அடங்கும். அதேபோல் இங்கிலாந்து மண்ணில் அதிக அரைசதங்களை விளாசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.
இதுவரை தோனி 8 அரைசதங்களை விளாசியதே சாதனையாக இருந்து வந்தது. தற்போது ரிஷப் பண்ட் 9 அரைசதங்களை விளாசியதன் மூலமாக அந்த சாதனையையும் முறியடித்துள்ளார். காயம் அடைந்த போது கொஞ்சமும் அசராமல் ரிஷப் பண்ட் தைரியமாக களமிறங்கி அரைசதம் அடித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

