ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை என்றாலும், ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டார். டி20 உலகக்கோப்பை தொடரில் ரிங்கு சிங் சேர்க்கப்படவில்லை என்றாலும், இந்திய அணியின் திட்டத்தில் ரிங்கு சிங் ஃபினிஷராக சேர்க்கப்பட்டது ரசிகர்களிடையே உற்சாகத்தை கொடுத்தது.
ஃபார்முக்கு வந்த ரிங்கு சிங்
அந்த உற்சாகத்தில் ரிங்கு சிங் உத்தரப் பிரதேச லீக் தொடரில் ஒவ்வொரு அணியையும் விளாசி தள்ளி வருகிறார். 5 இன்னிங்ஸில் ஆடியுள்ள ரிங்கு சிங் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 199 ரன்களை விளாசி இருக்கிறார். அந்த வகையில் மீரட் மேவ்ரிக்ஸ் அணியின் கேப்டனான ரிங்கு சிங், லக்னோ ஃபால்கன்ஸ் அணியை வெளுத்து கட்டினார்.
முதலில் பேட்டிங் ஆடிய மீரட் மேவ்ரிக்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்களை குவித்தது. ரிதுராஜ் சர்மா 37 பந்துகளில் 5 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 74 ரன்களை குவித்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ரிங்கு சிங் 27 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 57 ரன்களை குவித்தார். அதிலும் புவனேஷ்வர் குமார் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.
ரிங்கு சிங் சம்பவம்
அதிலும் விப்ராஜ் நிகம் வீசிய 2வது பந்திலேயே ரிங்கு சிங் அடித்த சிக்ஸ் ரசிகர்களை பிரமிக்க வைத்தது. இதன்பின் களமிறங்கிய லக்னோ ஃபால்கன்ஸ் அணி 18.2 ஓவர்களில் 140 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக 93 ரன்கள் வித்தியாசத்தில் மீரட் மேவ்ரிக்ஸ் அணி வெற்றியைப் பெற்றது.
சிறப்பாக பவுலிங் செய்த யாஷ் கார்க் 3 விக்கெட்டுகளையும், விஜய் குமார் மற்றும் கார்த்திக் தியாகி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணியில் இடம் கிடைத்த குஷியில் ரிங்கு சிங் அடுத்தடுத்து ஃபார்முக்கு திரும்பி சதம், அரைசதம் விளாசி அசத்தி வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

