இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் நீடிக்க இத்தொடர் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணி ஜாம்பவான் விராத் கோலி தனது முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி இருப்பது ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது வரை தெரியவில்லை.
மிடில் ஆர்டரில் களமிறங்கும் விராட் கோலி போன்ற தரமான ஒரு வீரரை இங்கிலாந்து போன்ற வலிமையான ஒரு அணிக்கு எதிராக இழக்கும் வேளையில் அது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அவரது இடத்தை நிரப்ப தற்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்திருக்கும் ரஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது இழப்பை ஈடு செய்யும் வகையில் இந்திய அணி வீரர்கள் தங்களது சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும். இது குறித்து முன்னாள் ஆர்சிபி அணி வீரரும், விராட் கோலியின் நெருங்கிய நண்பருமான தென்னாப்பிரிக்க அணியின் ஜாம்பவான் ஏபி டிவிலியர்ஸ் இதற்கான காரணத்தை விரைவில் கண்டுபிடிப்பேன் என்று கூறியுள்ளார். பெங்களூர் அணியில் ஏபி டிவில்லியர்ஸ் விளையாட ஆரம்பித்ததிலிருந்தே விராட் கோலியின் நெருங்கிய நண்பராக இருக்கிறார்.
இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவிக்கையில்
“விராட் கோலி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விலகி இருப்பது ஏதேனும் ஒரு காரணமாக இருக்கலாம். குடும்ப காரணம் அல்லது தொடர்ந்து சீரான கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கையில் சோர்வடைந்து இருக்கலாம். ஆனால் இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்க வேண்டும்.
அது என்ன என்பதை நான் விரைவில் கண்டுபிடித்து விடுவேன். ஆனால் அதை பொது வெளியில் கூற மாட்டேன். ஏனெனில் அவருடைய நட்பை நான் மிகவும் மதிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். விராட் கோலியின் நெருங்கிய நண்பராக ஏபி டிவில்லியர்ஸ் ஆர்சிபி அணிக்காக விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பல வெற்றிகரமான இன்னிங்ஸ்களை விளையாடி இருக்கிறார்.
விராட் கோலிக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் ரஜத் பட்டிதார் 55 முதல் தர போட்டிகளில் விளையாடி பேட்டிங் சராசரி 45 ஆக வைத்துள்ளார். மேலும் இங்கிலாந்து லைன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 158 பந்துகளில் 151 ரன்கள் குவித்திருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் விபரம் :
ரோஹித் சர்மா (சி), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் லியர், கே.எல். ராகுல், கே.எஸ். பாரத் (வி.கே.), துருவ் ஜூரல் (வி.கே.), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (விசி), அவேஷ் கான், ரஜத் படிதார்

