ஐபிஎல் தொடரின் நாளைய போட்டியில் நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியை எதிர்த்து சிஎச்கே அணி விளையாட இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டிக்காக இரு அணிகளும் சிறப்பாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் நாளைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ருதுராஜ் காயம்
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது துஷார் தேஷ்பாண்டே வீசிய ஒரு பந்து, சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் அடித்தது. அப்போதே களத்தில் ருதுராஜ் துடிதுடித்தார். இதன்பின் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆட மாட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில், காயத்துடன் அடுத்தடுத்து 2 போட்டிகளில் ஆடினார்.
ஆனால் தற்போது ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை காயம் தீவிரத்தன்மை வாய்ந்தது என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனில் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை காயம் குறித்து முழுமையான தகவல் சிஎஸ்கே அணிக்கு கிடைத்துள்ளது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுச்சி பெறுமா சிஎஸ்கே?
இதனால் மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி பொறுப்பை ஏற்றுள்ளார். சிஎஸ்கே அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 4 தோல்வியை சந்தித்துள்ளது. புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி 9வது இடத்தில் இருந்தாலும், தோனியின் கேப்டன்சி கீழ் அந்த அணி எழுச்சி பெறும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
ஏனென்றால் சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளை தோனி வென்று கொடுத்துள்ளார். கடந்த சீசனுக்கு முன்பாக கேப்டன்சியை விட்டுக் கொடுத்த நிலையில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வந்தார். இதனால் சிஎஸ்கே அணி மாஸ் கம்பேக்கை கொடுக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

