ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை குவித்தது. ஆர்சிபி அணிக்காக சிறப்பாக ஆடிய விராட் கோலி 70 ரன்களையும், தேவ்டத் படிக்கல் 50 ரன்களையும் குவித்தனர்.
இதன்பின் ராஜஸ்தான் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி – ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தது. புவனேஷ்வர் வீசிய 1 பந்திலேயே சிக்ஸ் அடித்து ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடங்கினார். இதன்பின் யாஷ் தயாள் வீசிய 2வது ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட, வைபவ் சூர்யவன்ஷி தன் பங்கிற்கு 2 சிக்ஸ் விளாசி தள்ளினார். இதன்பின் அவர் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ராஜஸ்தான் அதிரடி
ஆனாலும் ஜெய்ஸ்வால் அதிரடியில் விளாசி தள்ளினார். ஹேசல்வுட் பவுலிங்கிலேயே ஹாட்ரிக் பவுண்டரியை விளாசிய அவர், அடுத்தடுத்து சிக்ஸ் பறக்கவிட்டார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த ரியான் பராக் – ராணா இணையும் அதிரடியில் அடுத்த கட்டத்தை எட்டினார்கள்.
இதனால் ராஜஸ்தான் அணி 8.1 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டியது. ஆனால் க்ருணால் பாண்டியா பவுலிங்கில் கேப்டன் ரியான் பராக் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த சில ஓவர்களில் நிதீஷ் ராணாவும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அதிகம் நம்பிய ஹெட்மயரும் 11 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
7 பந்தில் 4 விக்கெட்டுகள்
இதனால் ராஜஸ்தான் அணி 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது புவனேஷ்வர் வீசிய ஒரே ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் விளாசப்பட்டது. அடுத்த ஓவரில் ஜுரெல் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனால் ஆர்சிபி வெற்றிக்கு 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீச யாஷ் தயாள் வந்தார். முதல் பந்திலேயே சுபம் துபே விக்கெட் கொடுக்க, ஹசரங்காவும் ரன் அவுட்டாகினார். இதன் மூலமாக ஆர்சிபி அணியின் வெற்றி உறுதியாகியது. இந்த சீசனில் சொந்த மண்ணில் ஆர்சிபி அணி வெல்லும் முதல் போட்டி இதுதான். அதேபோல் புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

