ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை விளாசியது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
ரியான் பராக் பேட்டி
இந்த தோல்வியின் காரணமாக ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது. இந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேசும் போது, மும்பை அணியின் திட்டத்திற்கும், செயல்பாடுகளுக்கும் 100 சதவிகிதம் பாராட்டுகளை சொல்ல வேண்டும். அவரின் பேட்டிங் மூலம் ஆட்டத்தை எளிதாக அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிட்டார்கள்.
ஓவருக்கு 10 ரன்களை கன்சிஸ்டன்சியுடன் அடித்தார்கள். கடைசி நேரத்தில் கூடுதல் அதிரடியாக ஆடினார்கள். எங்களின் பேட்டிங் மோசமாக அமைந்ததால், இந்த நாள் எங்களின் நாளாக அமையவில்லை. இந்த பிட்சில் 190 ரன்கள் முதல் 200 ரன்கள் என்பதை எளிதாக சேஸிங் செய்துவிடலாம். ஆனால் கடைசியில் ஹர்திக் மற்றும் சூர்யா இருவரும் அதிரடியாக ஆடினார்கள்.
மிடில் ஆர்டர் மோசம்
சில இடங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். நாங்கள் பவர் பிளேவில் நன்றாக செயல்படுகிறோம். ஆனால் மிடில் ஆர்டரில் சொதப்பிவிடுகிறோம். நான், துருவ் உள்ளிட்ட வீரர்கள் ரன்கள் சேர்ப்பதில்லை. நாங்கள் சிறப்பாக விளையாடிய சூழலில், கோட்டைவிட்டுள்ளோம். இந்த சீசனில் ஏராளமான தவறுகளை, சரியான விஷயங்களையும் செய்துள்ளோம்.
ஆனால் இப்போது அதனை கவனத்தில் கொள்ள தேவையில்லை. சில போட்டிகளில் கடைசி நேரத்தில் தோல்வியை சந்தித்துள்ளோம். அடுத்த 3 போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்பட தீவிரமாக உள்ளோம். அடுத்த சீசனில் அணியை தயார் செய்ய வேண்டும். முதல் 10 போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளை போல் மீண்டும் கிடைத்தால், அதனை பயன்படுத்தி கொள்வோம் என்று தெரிவித்தார்.

