ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்களையும், ஷஷாங்க் சிங் 52 ரன்களையும் விளாசினர்.
ருதுராஜ் ஏமாற்றம்
இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் ரச்சின் – கான்வே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவருமே பவுண்டரிகளை விளாசி சிறப்பாக ரன்களை சேர்க்க, 6 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 60 ரன்களை சேர்த்தது. அப்போது அதிரடியாக ஆட முயன்று ரச்சின் ரவீந்திரா 36 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் ருதுராஜ் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
இதன்பின் கான்வே – சிவம் துபே கூட்டணி இணைந்தது. இருவரும் அதிரடியாக ரன்களை குவித்த நிலையில், சிஎஸ்கே அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 15 ஓவர்களில் 145 ரன்கள் சேர்க்கப்பட, சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 77 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது சிவம் துபே 42 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி களம் புகுந்தார்.
தோனி சர்ப்ரைஸ்
இதனைத் தொடர்ந்து கான்வே 69 ரன்கள் எடுத்து ரிட்டையர் அவுட்டாகி வெளியேற, கடைசி 12 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனி – ஜடேஜா கூட்டணி களத்தில் இருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் 15 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி 6 பந்தில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை வீசுவதற்கு யாஷ் தாக்கூர் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே தோனி 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 4வது தோல்வியை சந்தித்துள்ளது.

