ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. உலக டி20 கிரிக்கெட் லீக்கில் அதிக ரன்களை ஷேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்திருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 42வது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர். அவர்கள் இருவரும் களமிறங்கியது முதலே பஞ்சாப் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள்.
பந்துவீச்சில் மிகவும் சுமாராகவே செயல்பட்டது பஞ்சாப் அணி. ஷாட் பால் வீக்னஸ் இருக்கிற சுனில் நரேனுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசாமல் மெதுவான பந்துகளை வீசியே அதிரடியாக ஆட வைத்தது. சுனில் நரேன் 32 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என 71 ரன்கள் குவித்தார். தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது.
இதற்கு பின்னர் களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் 23 பந்துகளில் 39 ரன்கள், ஆண்ட்ரே ரசல் 12 பந்துகள் 24 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 28 ரன்கள் என 20 ஓவர்களில் கொல்கத்தா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிதரப்பில் ராகுல் சகார் மட்டுமே ஓரளவு நன்றாக பந்துவீசி 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் இந்த மெகா இலக்கை நோக்கி துரத்திய பஞ்சாப் அணியினருக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பிரபு சிம்ரன் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் மிகச் சிறப்பாக கை கொடுத்தனர். ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடிய பிரபு சிம்ரன் 20 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 54 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி தொடக்க விக்கட்டுக்கு ஆறு ஓவர்களில் 93 ரன்கள் குவித்தது.
பின்னர் அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 48 பந்துகளில் எட்டு பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என 108 ரன்கள் குவித்து அபார சதம் விளாசினார். இவருக்கு பக்கபலமாக இருந்த சஷாங்க் சிங் 28 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 68 ரன்கள் விளாசி பஞ்சாப் அணியினை இவர்கள் இருவரும் வெற்றி பெற வைத்தனர். 18 ஓவர்களில் 262ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க:உலகின் சக்தி வாய்ந்த பேட்ஸ்மேன் தோனி.. ஒரு வருஷமா பேட்டை தொடல ஆனா.. தோனி குறித்து லட்சுமிபதி பாலாஜி
இந்த வெற்றியின் மூலம் உலக டி20 கிரிக்கெட் லீக்கில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற பெருமையை பஞ்சாப் அணி பெற்று இருக்கிறது. இதற்கு முன்னர் இதே வருடத்தில் ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக சேஸ் செய்யப்பட்ட 224 ரன்கள் சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பஞ்சாப் அணி முறியடித்து இருக்கிறது.

