நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணி முழுமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் கொண்டு வரப்பட்டுள்ளார். அதேபோல் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.
அதேபோல் அர்ஷ்தீப் சிங் மற்றும் சாஹல் ஆகியோர் தலா ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்டனர். அதேபோல் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், அஸ்மத்துல்லா ஓமர்சாய், நேஹல் வதேரே போன்ற தரமான வீரர்களை பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது. முதல்முறையாக பஞ்சாப் அணியின் பிளேயிங் லெவன் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. இதனால் 11 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று பார்க்கப்படுகிறது.
கடினமான பேட்ஸ்மேன்கள்
இந்த சூழலில் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ள யுஸ்வேந்திர சாஹல் கூறும் போது, ஐபிஎல் தொடரில் பவுலிங் செய்வதற்கு அதிகம் பயந்த பேட்ஸ்மேன்கள் யாரென்றால், ஒன்று ஹெய்ன்ரிக் கிளாசன், மற்றொருவர் நிக்கோலஸ் பூரன். ஏனென்றால் பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்களான அவர்கள், சில நேரங்களில் எட்ஜ் பட்டு கூட சிக்ஸ்-க்கு செல்லும்.
எனக்கு அவர்கள் இருவருமே சவாலான பேட்ஸ்மேன்கள். அவர்களுக்கு எதிராக சிக்சர்களையும் கொடுத்துள்ளேன். அவர்களின் விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளேன். ஆனால் பவுலிங் செய்யும் போது, அந்த பேட்ஸ்மேனின் பெயர் என்ன என்பதை ஒருநாளும் பார்த்தது கிடையாது. அவர்களின் வரலாற்றை பார்த்தால், அது நம் மனதில் அழுத்தத்தை உருவாக்கிவிடும்.
மனஉறுதிதான் எல்லாமே
அவர்களின் கையில் பேட் உள்ளது. எனது கையில் பால் உள்ளது. இரண்டுக்கும் இடையிலான யுத்தத்தில் நான் வெல்ல வேண்டும் என்று நினைப்பேன். நான் ஒன்றும் 6.5 அடி உயரமோ அல்லது அதிக எடையோ கொண்ட வீரரல்ல. ஆனால் என் மனநிலையை சரியாக வைத்து கொள்வேன். எனக்கு அதுதான் எல்லாமே என்று தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு சாஹலுக்கு அவரின் மனைவி தனஸ்ரீ வர்மா உடன் விவாகரத்து நடந்தது. அதன்பின் சாஹல் தனது புதிய காதலியுடன் நேரம் செலவிட்டு வந்தார். இதனால் ஐபிஎல் தொடரின் போது அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

