டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ரோஹித் சர்மா கேப்டனாக நீடிக்கிறார். இந்தியா அணி ஐபிஎல்க்கு முன்னர் விளையாடும் சர்வதேசக் கடைசி டி20 தொடர் இதுவாகும்.
இதற்குப் பின்னர்தான் உலகக்கோப்பை தொடங்க உள்ளது. எனவே இத்தொடர் தேர்வாளர்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் பெறும் வகையில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களைப் பொறுத்தவரையில் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் இறங்குவது ஏறக்குறைய உறுதி. மூன்றாம் இடத்தில் விராட் கோலி களம் இறங்குகிறார்.
மிடில் ஆர்டரில் திலக் வர்மா இறங்குவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. விக்கெட் கீப்பரைப் பொறுத்தவரை தற்போது அதிக போட்டி நிலவுகிறது. இஷான் கிஷன், ஜித்தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட் கீப்பர் இடத்திற்கு போட்டி போடுகின்றனர். இசான் கிஷனிற்கு அதிக டி20 போட்டிகளில் வாய்ப்பளித்த போதிலும் அவரால் தொடர்ச்சியான பங்களிப்பை வழங்க முடியவில்லை.
மேலும் ஜித்தேஸ் சர்மா அணிக்குள் நுழைந்து சிறிது காலமே ஆகியுள்ள நிலையில் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. எனவே சஞ்சு சாம்சன் சிறந்த தேர்வாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஐபிஎல்இல் பல ஆண்டுகள் விளையாடியுள்ள நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்முறையாக இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
பவர் ஹிட்டிங் பேட்ஸ்மேன் ஆன இவர் எந்த பவுலரையும் சிரமமின்றி எதிர்கொள்வார். ஆனால் இவரின் குறைபாடு தொடர்ச்சியாக ஆட்டங்களில் நிலையான பங்களிப்பை வழங்க முடிவதில்லை. இவர் கடந்த ஐபிஎல் சீசனில் வெறும் 374 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 19.68 ஆக இருந்துள்ளது. இதனை இவர் சரி செய்யும் பட்சத்தில் இவரால் அணியை எளிதாக வெற்றி பெற வைக்க முடியும்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், ஐபிஎல்இல் நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது
“உலகக்கோப்பை டி20 தொடரைப் பொறுத்தவரை நான் இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்வேன். அவரிடம் நிறைய நல்ல ஷாட்கள் உள்ளன. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் நன்றாக விளையாடும் திறன் பெற்றவர். எனவே அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலும், ஐபிஎல்லிலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.
அப்போதுதான் உலகக் கோப்பைக்கு முன் தேர்வாளர்களின் கவனத்தை அவர் ஈர்ப்பார்” என்று கூறி இருக்கிறார்.

