இந்திய அணி சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் சிவம் தூபே அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். முதல் இரு போட்டிகளிலும் அரை சதம் அடித்த அவர் தனது பவர் ஹிட் திறமையின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேலும் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் ஷர்மா முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி கவனிக்கத்தக்க வீரராக இருக்கிறார். மேலும் பந்துவீச்சில் முகேஷ் குமார் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் சிறப்பான முறையில் பந்து வீசி வருகின்றனர். இப்படி உலகக் கோப்பைக்கு முன்பாக கிட்டத்தட்ட இந்திய அணி தயார் நிலையில் உள்ளது என்றுதான் கூற வேண்டும். ஸ்பின்னரைப் பொறுத்தவரை ரவி பிஸ்னாய் சிறப்பாகப் பந்து வீசி வருகிறார்.
தற்போது இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இந்திய அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலத்தைத் தருகிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியில் ரோஹித் சர்மா சற்று மனரீதியாக சோர்வடைந்து இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் இரு போட்டிகளில் எதிர்பாராத விதமாக டக் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் மூன்றாவது போட்டியில் நடந்தது வேறு.
தன் மீது வைத்திருந்த அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி அளிக்கும் வகையில் பெங்களூரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வின்டேஜ் ரோஹித் சர்மா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரோகித்தை அப்போட்டியில் காணமுடிந்தது. அணியின் ஸ்கோர் 30/4 என்ற நிலையில் இருந்த போது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி பின்னர் பவுண்டரி, சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
69 பந்துகளில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 121 ரன்கள் விளாசியுள்ளார். இப்போட்டியைக் கண்ட இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் ரோஹித் சர்மாவைப் பற்றி வெகுவாக பாராட்டி பேசி உள்ளார். கடைசி நான்கு ஓவர்கள் ரோகித் சர்மாவிற்கு வீசுவது மிகவும் கடினம் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்த அவர் கூறுகையில்,
“இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அணியின் ஸ்கோர் 30/4 என்ற நிலையில் இருந்த போது ரோஹித் சர்மா ஆட்ட சூழ்நிலையை நன்றாக புரிந்து கொண்டு விளையாடிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் கடைசி நான்கு ஓவர்கள் அவருக்கு செட் செய்து வீசுவது என்பது மிகவும் கடினமான காரியம்.
இந்தப் போட்டியின் மூலம் அவர் ஒரு ‘பாஸ்’ என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தியுள்ளார். உலகக் கோப்பையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய அதே அதிரடியை தற்போது இப்போட்டியிலும் வெளிப்படுத்தியுள்ளார். உடலை நோக்கி வீசப்படும் லென்த் பந்துகளை அவர் பிக்-அப் ஷாட் மூலம் சிறப்பாக ஆடுகிறார். நீங்கள் ஒருவேளை யார்க்கர் பந்துகளை மிஸ் செய்தால் அது கண்டிப்பாக ஆறு ரன்கள்தான். முதல் இரு போட்டிகளில் எதிர்பாராத விதமாக அவுட் ஆனாலும் மூன்றாவது போட்டியில் அவர் விளையாடிய விதம் மிகவும் அருமையாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.

