இன்று நடைபெற உள்ள டி20 உலக கோப்பை இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன. நேற்று நடைபெற்ற முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வென்று நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி இருக்கிறது. எனவே இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
நேற்று நடைபெற்ற முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் என 100 ரன்கள் குவித்து டி20 உலக கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை படைத்தார்.
இதனால் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பின் ஆலன் இறுதி போட்டி குறித்து கூறும்போது “நாங்கள் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறோம். எனவே எங்களோடு விளையாட இந்தியா அல்லது இங்கிலாந்து என இரண்டு அணிகளில் ஏதேனும் ஒன்று வரும். எந்த அணி வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் அது அது இறுதிப் போட்டி. அதில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறோம்” என்று பேசி இருக்கிறார்.

