நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே இருக்கிறது. ஏற்கனவே சிஎஸ்கே, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் பயிற்சி முகாமை தொடங்கிவிட்டனர். குறிப்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஜாம்பவான் வீரரான தோனி, அஸ்வின் உள்ளிட்ட அனைவரும் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிஎஸ்கே அணியில் ராகுல் திரிப்பாட்டி
இம்முறை சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்துள்ளார் ராகுல் திரிப்பாட்டி. இவர் ஏற்கனவே 2017ம் ஆண்டு புனே அணிக்காக தோனியின் தலைமையின் கீழ் அறிமுகமானவர். அப்போதே பலரின் கவனத்தையும் ஈர்த்த திரிப்பாட்டி, தொடர்ச்சியாக கேகேஆர், ஐதராபாத் உள்ளிட்ட அணிகளில் விளையாடி வந்தார். இம்முறை மெகா ஏலத்தில் ரூ.3.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
தற்போது ராகுல் திரிப்பாட்டியும் சிஎஸ்கே அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். தற்போது சிஎஸ்கே அணியுடன் இணைந்தது மற்றும் தோனி குறித்து ராகுல் திரிப்பாட்டி கூறும் போது, புனே அணிக்காக அறிமுகம் ஆவதற்கு 2 நாட்கள் இருக்கும். அப்போது தோனியை கூர்ந்து எப்படி தயாராகிறார் என்பதை கவனித்து வந்தேன்.
தோனி சொன்ன வார்த்தை
அப்போது திடீரென என்னை அழைத்த தோனி, பெரிதாக எதையும் கண்டுகொள்ள வேண்டும். புதிதாக சிந்தித்து இப்படி விளையாட வேண்டும் என்று முயற்சிக்காதே. பயிற்சியில் என்ன செய்தாயோ, அதேயே ஆட்டத்திலும் செய்தால் போதும். அப்படியொரு அட்வைஸ் அந்த நேரத்தில் வந்தது மிகப்பெரிய உதவியாக வந்தது. எனது தன்னம்பிக்கையை உயர்த்தியது.
எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த அவரது வார்த்தைகள் உதவியாக இருந்தது. தோனியுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்தது வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம். உலகில் உள்ள ஏராளமான கிரிக்கெட் வீரர்களுக்கு தோனியுடன் விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. அது எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

