இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கம்பேக் கொடுத்திருந்தார். 2023 உலகக்கோப்பை தொடருக்கு பின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர், சுமார் ஓராண்டுக்கும் மேலாக ஓய்வில் இருந்தார். இதன்பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கம்பேக் கொடுத்த போதும், முகமது ஷமியால் பழைய ஃபார்முக்கு திரும்ப முடியவில்லை.
முகமது ஷமி கம்பேக்
அதன்பின் ஐபிஎல் தொடரில் கிடைத்த வாய்ப்பிலும் முகமது ஷமியால் துல்லியம் மற்றும் ஸ்விங்குடன் பவுலிங் செய்ய முடியவில்லை. அவரால் நீண்ட ஸ்பெல்லை வீச முடியாமல் தடுமாறி வந்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கூட முகமது ஷமி சேர்க்கப்படவில்லை. இது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றது.
இந்த நிலையில் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் துலீப் டிராபி தொடரில் விளையாடி வருகிறார். வடக்கு மண்டல அணிக்கு எதிரான போட்டி கிழக்கு மண்டல அணி விளையாடி வருகிறது. இதில் கிழக்கு மண்டல அணிக்காக முகமது ஷமி களமிறங்கினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 23 ஓவர்களை வீசி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து 100 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
சொதப்பிய முகமது ஷமி
அந்த ஒரு விக்கெட்டும் புதிய பந்தில் வீசிய போது கிடைத்ததுதான். ஷமியின் பவுலிங்கில் அதிக ரன்கள் சென்றதால், வடக்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்களை குவித்தது. இத்தனைக்கும் இந்த போட்டி முகமது ஷமிக்கு பரீட்சயமான பெங்கால் மண்ணில் நடந்து வருகிறது. இதனால் முகமது ஷமி மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
34 வயதாகும் முகமது ஷமியால், ரெட் பால் கிரிக்கெட்டில் இன்னும் ஏராளமான பங்களிப்பை இந்திய அணிக்காக வழங்க முடியும். அதற்காக உடற்தகுதியுடன் முகமது ஷமி இருக்கும் நிலையில், ஃபார்முக்கு திரும்பினால் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய உதவியாக அமையும். மேலும் டி20 கிரிக்கெட்டில் இருந்து முகமது ஷமி ஓரம்கட்டப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.

