நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து இந்திய ஆல் ரவுண்டர் அக்ஷார் பட்டேல் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் எப்போதுமே இரண்டு நாட்டு அணி வீரர்கள் மட்டுமின்றி இரண்டு நாட்டு மக்கள் மற்றும் ஊடகங்கள் என அனைத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும். அதிலும் குறிப்பாக ஊடகங்கள் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் பரம எதிரி,பங்காளி சண்டை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும்.
இந்த சூழ்நிலையில் அது குறித்து அக்ஷார் பட்டேல் பேசும் போது “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியா பாகிஸ்தான் போட்டி எனும்போது நாங்கள் பாகிஸ்தான் அணியை மற்றொரு அணியாகவே பார்க்கிறோம். நாங்கள் களத்தில் இருக்கும்போது எதிரணி யார் என்று பார்ப்பதில்லை. பந்து வீச வந்தோம் நன்றாக விளையாடினோம் பெற்று விட்டோம் அவ்வளவுதான். இதில் பரம எதிரி என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது” என்று பேசி இருக்கிறார்.

