17-வது ஐபிஎல் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் டீ காக் ஆகியோர் களமிறங்கினர். பவர் பிளேவில் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் முதல் விக்கெட்டை பறி கொடுத்தது.
கேப்டன் கே எல் ராகுல் இரண்டு சிக்ஸர்களை விளாசிய நிலையில், இருபது ரன்கள் குவித்து வெளியேறினார். அதன் பிறகு வந்த படிக்கல் ஆறு ரன்களில் வெளியேற, பின்னர் களமிறங்கிய ஸ்டாய்னிஸ் டீ காக்குடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஸ்டாய்னிஸ் 24 ரன்களில் வெளியேற, அதற்கு பிறகு கலமிறங்கிய பூரான் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 40 ரன்கள் விளாசி வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த டீ காக் 56 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 81 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக நான்கு ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பிறகு 182 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு, விராட் கோலி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். பதினாறு பந்துகளில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 22 ரன்கள் குவித்த நிலையில் சித்தார்த்தின் பந்துவீச்சில் வெளியேறினார். அதன்பிறகு டு பிளஸ்சிஸ் 19 ரன்களில் ரன் அவுட் ஆக, அதன் பிறகு மேக்ஸ்வெல் களம் இறங்கினார்.
அதே நேரத்தில் லக்னோ அணியின் ராஜதானி எக்ஸ்பிரஸ் மயங்க் யாதவை கே எல் ராகுல் பந்துவீச அழைக்க, மேக்ஸ்வெல் எதிர்கொண்ட இரண்டாவது பந்தியிலேயே பூரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஒன்பது பந்துகளுக்கு ஒன்பது ரன்கள் குவித்த நிலையில், மயங்க் யாதவின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியா இந்த விஷயத்துல தோனிகிட்ட கத்துக்கணும்.. அப்பதான் ஜெயிக்க முடியும்.. கூறுகிறார் நவ்ஜோத் சிங்
இறுதியில் லோம்ரோர் மட்டும் அதிகபட்சமாக 13 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் என 33 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. லக்னோ அணித்தரப்பில் மயங்க் யாதவ் நான்கு ஓவர்கள் பந்து வீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

