இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. ஆனால் போட்டி முடிந்த பிறகு ரசிகர்கள் அதிகம் விவாதிப்பது தோல்வியைப் பற்றி அல்ல. நெருக்கடியான நேரத்தில் இந்திய அணி எடுத்த ஒரு பேட்டிங் முடிவுதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எடுத்த திட்டம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
201 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, வெறும் 52 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த சூழலில் அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் சிவம் துபே களமிறங்கி இன்னிங்ஸை நிலைநிறுத்துவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணி, அவருக்கு முன்பாகவே வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவை களமிறக்கியது. இந்த முடிவு உடனடியாகவே ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது.
“இது என்ன முடிவு?” – தினேஷ் கார்த்திக் கேள்வி. போட்டிக்கு வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், இந்த முடிவை வெளிப்படையாகவே விமர்சித்தார். “சீரியஸாவா? ஹர்ஷித் ராணாவை அனுப்புகிறீர்களா? சிவம் துபேவை ஏன் காத்திருக்க வைத்தீர்கள்? அப்படியானால் துபே மீது அணிக்கு நம்பிக்கை இல்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். நெருக்கடியான நேரத்தில் பேட்டிங் செய்யக்கூடிய வீரரை பின்னுக்குத் தள்ளியதற்கான காரணம் புரியவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
ஆனால் இந்திய அணியின் இந்த முயற்சி எந்த பலனையும் தரவில்லை. ஹர்ஷித் ராணா விரைவிலேயே ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சிவம் துபேவும் அணியை மீட்க முடியாமல் வெளியேறினார். அதன் பிறகு இந்தியாவின் பேட்டிங் வரிசை முழுமையாக சிதறியது. இறுதியில் இந்திய அணி வெறும் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, டி20 வரலாற்றிலேயே ரன்கள் அடிப்படையில் மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்தது.இந்தப் போட்டிக்குப் பிறகு சமூக வலைதளங்களிலும் இந்த பேட்டிங் ஆர்டர் குறித்து கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது.
முக்கியமான கட்டத்தில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனை விட ஒரு வேகப்பந்து வீச்சாளரை முன்னதாக அனுப்பியது சரியான முடிவா என்ற கேள்வி தற்போது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

