ஐபிஎல் தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து கேகேஆர் அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் – ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தது. இருவருமே அதிரடியாக ரன்களை விளாசினர்.
தடுமாறிய ராஜஸ்தான்
முதல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்த நிலையில், சஞ்சு சாம்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் ரியான் பராக், அதிரடியாக சிக்ஸ் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் வருண் சக்கரவர்த்தியை அட்டாக் செய்ய முயன்று 25 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஜெய்ஸ்வாலும் 29 ரன்களில் வெளியேறினார்.
இதையட்த்து வந்த ஹசரங்கா 4 ரன்களிலும், நிதிஷ் ராணா 8 ரன்களிலும், சுபம் துபே 9 ரன்களிலும், ஹெட்மயர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய துருவ் ஜுரெல் 33 ரன்களில் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்தது. கேகேஆர் அணி தரப்பில் வருண், அலி, ராணா, வைபவ் அரோரா உள்ளிட்ட 4 பேரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பொளந்துகட்டிய டி காக்
இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணிக்கு மொயின் அலி – டி காக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மொயின் அலி உருட்ட, டி காக் அதிரடியாக விளாசி ரன்களை குவித்தார். 6 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்திருந்த போது, மொயின் அலி 5 ரன்களில் ரன் அவுட்டாகினார். பின்னர் வந்த ரஹானே 18 ரன்களில் ஆட்டமிழக்க, டி காக் – ரகுவன்ஷி இணை கடைசி வரை களத்தில் இருந்து கேகேஆர் அணி வெற்றியை உறுதி செய்தது.
அதிரடியாக ஆடிய டி காக் 61 பந்துகளில் 6 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 97 ரன்களை விளாசி அசத்தினார். இறுதியாக17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை விளாசி வெற்றியை பெற்றனர். இதன் மூலமாக கேகேஆர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதனால் ராஜஸ்தான் அணி தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

