ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் சமர் ஜோசப்பை மூன்று ஐபிஎல் அணிகள் ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தற்போதைய இளம் கதாநாயகன் 24 வயதே ஆன சமார் ஜோசப் தொடர்ச்சியாக 12 ஓவர்கள் பந்து வீசி 68 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தவர். ஆஸ்திரேலியா அணியின் கோட்டை என்று அழைக்கப்படும் கப்பா மைதானத்தில் தனி ஒரு வீரனாக போராடி ஆஸ்திரேலியா அணியின் கனவை உடைத்தார். ஒரு முனையில் ஸ்டீவ் ஸ்மித் போராடினாலும் மறுமுனையில் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் வரிசை சுக்கு நூறாக உடைத்து எரிந்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுக் கொடுத்த சமர் ஜோசப்பிற்கு உலகமெங்கிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்போட்டியை நேரில் கண்டு களித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் ப்ரெயின் லாரா சமர் ஜோசப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அசுர வேகத்தில் சரியான லைன் அண்ட் லெந்தில் துல்லியமாக பந்து வீசும் இவரை ஐபிஎல் அணிகள் குறி வைக்கத் தவறவில்லை.
ஆனால் தற்போது நடந்து முடிந்த மினி ஏலத்தில் அவரை அடிப்படை விலைக்கே வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. இந்நிலையில் பிரபல அனாலிஸ்ட் ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரசன்னா சிபிஎல் தொடரில் கயானா அணிக்காக அனாலிஸ்ட் ஆக பணியாற்றியவர். அப்போதே சமர் ஜோசப்பின் திறமையை அடையாளம் கண்டு அவரை கயானா அணிக்காக ஒப்பந்தம் செய்தார். இவர் மேலும் ஐபிஎல் இல் ஆர்சிபி, மற்றும் புனே அணிகளின் அனாலிஸ்ட் ஆக பணியாற்றியவர்.
சமர் ஜோசப்பின் ஐபிஎல் தொடக்கம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசிய பிரசன்னா
“சமர் ஜோசப்பை வாங்க 3 ஐபிஎல் அணிகள் சமர் ஜோசப்பின் மேலாளர் நம்பரைப் பெற என்னை அணுகினார்கள். ஏலத்தின் போது அவரை வாங்க இந்த மூன்று அணிகளுக்கும் அட்வைஸ் செய்தேன். ஆனால் இவரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை. தற்போது இவரின் திறமையைக் கண்டு இவரை வாங்க போட்டி போடுகின்றன. எனவே சரியான அணியை டிக் செய்ய சமர் ஜோசப்பிற்கு அட்வைஸ் செய்வேன்” என்று கூறினார்.
இந்நிலையில் சமர் ஜோசப் பெங்களூர் அணிக்கு விளையாடுவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. எனவே அவரது ஐபிஎல் தொடக்கம் எந்த அணிக்காக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

