முன்னாள் இந்திய நட்சத்திரம் ஹர்பஜன் சிங், கிரிக்கெட்டின் நடப்பு கோட்டாக வலம் வரும் விராட் கோலியின் ஆரம்பக் கால தடுமாற்றதையும், அச்சமயத்தில் அவர் கொடுத்த ஊக்கம் குறித்தும் பேசியுள்ளார்.
விராட் கோஹ்லி 2008ஆம் ஆண்டு சீனியர் இந்திய அணியில் நுழைந்தார். இன்று கோலி கிரிக்கெட்டின் உச்சத்தில் இருப்பதற்கு அவருடைய சாதிக்க வேண்டுமென்ற வெறி தான். அவரின் ஆட்டத்தில், நடத்தையிலயே நாம் அதனைத் தெளிவாகக் காணலாம்.
2008இல் இலங்கை அணிக்கு எதிரான ஓர் ஒருநாள் போட்டியில் இது பற்றி நடந்த சம்பவத்தை ஹர்பஜன் சிங் நினைவுப் படுத்தி பகிர்ந்தார். “ வீரேந்திர ஷேவாக் அந்தப் போட்டியில் காயமடைந்தார். பின்னர் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் இந்திய வீரர்களை தொடர்ந்து அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். ”
“ இளம் விராட் கோஹ்லி முழு வேகத்துடன் விளையாடி அரை சதம் விளாசி அணியை மீட்டார். ஆட்டமிழந்தப் பின்னர் என்னிடம் வந்து தான் எவ்வாறு விளாயாடியதாகக் கேட்டார். நானும் நன்றாக பேட் செய்தாய் என்றேன். ஆனால் விராட் கோலி ஏமாற்றத்துடன் கோபமாக, ‘ நான் அவுட் ஆகியிருக்கக் கூடாது. இன்னும் கொஞ்சம் அடித்து ஆடியிருக்க வேண்டும். ’ எனக் கூறினார். அவரின் வெறி எனக்கு பிடித்திருந்தது. ” என்றார் ஹர்பஜன் சிங்.
கோலியின் இந்த நடத்தை தான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி சில வருடங்கள் கழித்து 2011 வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் கோலி மிகவும் சொதப்பலாக ஆடி வருத்தமாக அமர்ந்திருந்தார். வேகப்பந்து வீச்சாளர் ஃபிடல் எட்வர்ட்ஸ் விராட் கோலியை ஷார்ட் பால் போட்டு அச்சுருத்தினார்.
அப்போது விராட் கோலிக்கு, தான் உண்மையிலேயே திறன் கொண்டவர் தானா என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. உடனே ஹர்பஜன் சிங், “ நீ டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் சேர்க்கவில்லை என்றால் அது கேவலம். உனக்கு அதைச் சாதிக்கும் திறமை உள்ளது. ஒருவேளை அது நடக்கவில்லை என்றார் அது உன் தவறாக மட்டுமே இருக்கும். ” என்றார்.
அதன் பின்னர் 13 ஆண்டுகள் இன்றுவரை விராட் கோலி எங்கோ உயர்ந்துவிட்டார். “ கோலியின் மாற்றம் எனக்கு நன்கு தெரியும். இந்திய அணியை நான் தான் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன் என்ற அவரின் வேகம் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து சதங்கள் விளாசுவதில் துவங்கியது. இந்திய டெஸ்ட்டில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ” என்றார்.

