17-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்து அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே மாத இறுதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதி லீக் சுற்றில் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ருத்ராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூப்ளஸ்சிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. எனவே அனல் பறந்த இந்த போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாய் அமைந்தது.
சென்னை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை முஸ்தஃபிகுர் ரகுமான், துஷார் தேஷ்பாண்டே, தீபக்சகர், தீக்ஷானா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் இருந்தனர். இந்நிலையில் பேட்டிங் தொடங்கிய பெங்களூர் அணி பவர் பிளே முடியும் வரை ஓவருக்கு 10 ரன்கள் என்ற நல்ல ரன் ரேட்டிலேயே தொடர்ந்து வந்தது.
இருப்பினும் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிகுர் ரஹ்மானின் சிறப்பான பந்துவீச்சால் முதல் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி அதன் பிறகு அணியின் ரன் வேட்டையை சுழற்பந்து வீச்சாளர்கள் தடுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்தில் 150 ரன்களுக்குள் சுருண்டு விடும் என்ற நிலையிலிருந்த பெங்களூர் அணி சென்னை அணியின் இறுதிக்கட்ட பந்து வீச்சு சொதப்பலால் 20 ஓவர்களில் 173 ரன்கள் குவித்து விட்டது.
சென்னை அணியின் பந்துவீச்சாளர்களில் முக்கியமாக துஷார் தேஷ் பாண்டே நான்கு ஓவர்கள் பந்துவீசி 47 ரன்களும், சுழற் பந்துவீச்சாளர் தீக்சானா நான்கு ஓர்கள் வீசி 39 ரன்களும் கொடுத்தனர். எனவே பேட்டிங்கில் பலம் வாய்ந்த சென்னை அணி பந்துவீச்சில் இறுதிக் கட்டத்தில் கோட்டை விடுகிறது. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் சென்னை அணிக்கு யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் பத்திரானா இணைய போகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
காயம் காரணமாக சென்னை அணியின் முதல் ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளிவந்த நிலையில், தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு போட்டிகளில் விளையாட தயாராகிவிட்டார் என்று அவரது மேலாளர் தெரிவித்திருக்கிறார். எனவே சென்னை அணி விளையாடும் அடுத்த போட்டியில் பத்திரானா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் பங்கு பெற்று இறுதிக்கட்டத்தில் சிறப்பான முறையில் பந்து வீசி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 12 போட்டிகளில் விளையாடிய அவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவரது வருகை சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது

