17வது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது.
டெல்லி அணியின் சாய் ஹோப் அதிகபட்சமாக 33 ரன்கள் குவித்தார். மற்றும் இறுதி கட்டத்தில் இம்பாக்ட் பிளேயராக களம் இறங்கிய அபிஷேக் போரரே mல் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் நான்கு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் என 32 ரன்கள் விளாசி டெல்லி அணியின் ஸ்கோரை இறுதிக்கட்டத்தில் உயர்த்தினார். காயத்திலிருந்து மீண்டு வந்து பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே விளையாடிய ரிசப்பந்த் 18 ரன்களில் ஆட்டமிருந்து ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் 175 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 22 ரன்கள் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய ஆல்ரவுண்டர் ஷாம் கரண் நிதானமாக விளையாடி பஞ்சாப் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 47 பந்துகளில் ஆறு பவுண்டரி, ஒரு சிக்சர் என 63 ரன்கள் விளாசினார். மற்றொரு ஆல் ரவுண்டரான லிவிங்ஸ்டன் 21 பந்துகளில் 38 ரன்கள் விளாசி பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்நிலையில் டெல்லி அணியில் சிறப்பாக பந்து வீசிய இஷாந்த் சர்மா காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். எனவே தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில்
“இஷாந்த் சர்மாவின் காயம் எங்கள் அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்பது தெளிவாக தெரிந்தது. தொடக்கத்தில் எங்களது மோசமான பேட்டிங்கின் காரணமாக இம்பேக்ட் பிளேயரை பயன்படுத்தி விட்டோம். இதனால் எங்கள் அணியில் ஒரு பந்துவீச்சாளர் ஏற்கனவே குறைவாக இருந்தார். இந்த சூழ்நிலையில் இஷாந்த் சர்மாவின் காயமும் அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த போட்டியில் அபிஷேக் போரேல் சிறப்பாக விளையாடினார்.
அவரால்தான் கடைசி கட்டத்தில் எங்கள் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருப்பினும் பந்துவீச்சாளர்கள் முக்கியமான கட்டத்தில் சிறப்பாக பந்து வீசினர்.மேலும் தோல்விக்கான எந்த ஒரு காரணத்தையும் சொல்ல விரும்பவில்லை. ஒரு பந்துவீச்சாளர் இல்லாதது எங்களது தவறுதான். பஞ்சாப் அணியினர் சிறப்பாக விளையாடினர்” என்று கூறினார்.
மேலும் பஞ்சாப் அணியை பொறுத்தவரை 2017ஆம் ஆண்டு முதல் தொடக்கப் போட்டியில் தோல்வியை சந்தித்ததில்லை என்ற பெருமையை நீட்டித்து வருகிறது. 2020ஆம் ஆண்டு மட்டும் ஒரு போட்டி சமனில் முடிந்தது. முதல் தோல்வியைப் பெற்றுள்ள டெல்லி அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும்.

