ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 14 மாதங்கள் கழித்து திரும்பியது முதல் ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் இந்த அணி அறிவிப்பில் இதை விட பெரிய ஆச்சரியமாக அமைந்தது சஞ்சு சாம்சனை டி20 கிரிக்கெட் இந்திய அணியில் கொண்டு வந்ததுதான். ஏனென்றால் இந்த இடத்திற்கு இஷான் கிஷானை சில வருடங்களாக பயன்படுத்தி வருகிறார்கள்.
நடந்து முடிந்த ஆஸ்திரேலியா டி20 தொடரில் இஷான் கிஷானுக்கு முதல் மூன்று போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதுவும் மூன்றாவது இடத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர் இரண்டு அரை சதங்கள் அடித்து இருந்தார்.
இந்த நிலையில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிதேஷ் சர்மா மற்றும் இசான் கிஷான் இருவரும்தான் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக இடம் பெறுவார்கள் என்று பலரும் நினைத்திருந்தார்கள். இப்படியான நிலையில்தான் இஷான் கிஷான் அதிரடியாக கழட்டி விடப்பட்டிருக்கிறார்.
இந்திய அணிகள் தொடர்ந்து பயணித்தாலும் விளையாடுவதற்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், தனக்கு ஓய்வு கிடைக்காததாலும், மனச்சோர்வு அதிகமாக இருப்பதாக கூறி அவர் ஓய்வு கேட்டு வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகிக் கொண்டார்.
தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் சேர்த்துக் கொள்ளப்படாததற்கு அடுத்து, அவரை இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கும் தேர்வு செய்ய மாட்டார்கள் என்கின்ற தகவல் வெளியே வந்திருக்கிறது.
மேலும் அவர் இதற்கு மேல் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றால், அவர் தற்பொழுது நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிரிக்கெட் தொடரில் விளையாடி, மீண்டும் தன்னை நிரூபித்துதான் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்று கூறப்படுகிறது. ராகுல் டிராவிட் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று கூறினாலும், இது அவர் மீதான ஒழுக்க விதிமுறை மீறல் நடவடிக்கை கிடையாது என்பதாகவும் கூறியிருந்தார்.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசி உள்ள பிசிசிஐ அதிகாரி கூறும் பொழுது “அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் பொறுமையாக இருந்து தன்னுடைய இடத்தை காத்திருக்கலாம். இந்திய கிரிக்கெட்டில் உங்களுடைய சொந்த விருப்பப்படி உங்களுடைய இடத்தை நீங்கள் விட்டுக் கொடுத்தால், நீங்கள் அதை திரும்ப பெறுவது மிகவும் கடினம். காரணம் இந்தியாவில் நிறைய கிரிக்கெட் திறமைகள் இருக்கின்ற” என்று கூறியிருக்கிறார்.

