மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியாவை இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாசை இழந்த மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்திலேயே அந்த அணி விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் குவித்து இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோர் மட்டுமே மும்பை அணியை ஓரளவு கரை சேர்த்தனர்.
இல்லையெனில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரண்களுக்குள் சுரண்டிருக்கும். கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து திலக் வர்மா 33 ரன்களில் வெளியேற மும்பை இந்தியன்ஸ் அணியின் வீழ்ச்சி ஆரம்பமானது. முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 125 ரன்கள் குவித்தது. பின்னர் தனது வலுவான பேட்டிங் வரிசையின் மூலம் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம்வீரர் ரியான் பராக் சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ராஜஸ்தானின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் பங்கு பெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதல் இடத்தில் நீடிக்கிறது. மூன்று போட்டியிலும் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது. இந்த நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா தோல்வி பாதைக்கு தள்ளுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் இந்த நிலை இப்படியே நீடிக்குமானால் ஹர்திக் பாண்டியா தனது அணியின் மரியாதையை பெற மாட்டார் என்று கடுமையான விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“உங்கள் கேப்டன் கடினமான சூழ்நிலைகளில் வித்தியாசமான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும் என்று எப்போதும் விரும்புகிறீர்கள்.
ஆனால் அவர் அதை செய்யாவிட்டால் தனது அணியின் மரியாதையை பெற மாட்டார். உங்கள் சிறந்த பந்துவீச்சாளர்களை விரைவிலேயே பயன்படுத்துவது என்பது ஒன்றும் ராக்கெட் அறிவியல் விஷயம் அல்ல. தற்போது இறுதியாக பும்ரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவர் பிளேவில் பந்து வீசப் போகிறார். ஆனால் இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் கட்டாயப்படுத்தப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க :நான் இவருக்கு எதிரா புதுசா ட்ரை பண்ணனும்னு நினைப்பேன்.. ராஜஸ்தான் வீரர் டிரென்ட் போல்ட்
தற்போது இவரின் இந்த பதிவு ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தற்போது நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இனி வரும் அனைத்து போட்டியிலும் பெரும்பாலும் வெற்றியை பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மற்ற அணிகள் தற்போது வெற்றிகணக்கு தொடங்கியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் முதல் வெற்றியை பெற கடுமையாக போராடி வருகிறது.

