ஆஸ்திரேலியா மண்ணில் இரு டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதுவரை நடைபெற்றுள்ள 23 டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் 8 டெஸ்ட் தொடரில் 7ல் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. ஒரேயொரு முறை டெஸ்ட் தொடர் டிராவில் முடிவடைந்தது.
இதனிடையே உலகக்கோப்பை தொடரின் அடைந்த தோல்விக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளனர். செஞ்சுரியனில் தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் பும்ரா மற்றும் சிராஜ் மட்டுமே இந்திய அணி 145 கிமீ வேகத்தில் வீசக்கூடிய பவுலர்கள். இதனால் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே அனுபவமில்லாமல் உள்ளது.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசும் போது, இந்த டெஸ்ட் தொடர் எங்களுக்கு முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன். இதுவரை இந்த மண்ணில் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதனால் வரலாற்றை மாற்றுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. 2 முறை வெல்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது என்று சொல்ல முடியும்.
அதேபோல் எங்களின் வேகப்பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். இந்த தொடரில் காலில் ஏற்பட்ட காயத்தால் அனுபவ வீரரான முகமது ஷமி விலகியிருப்பது எங்களுக்கு பின்னடைவு தான். அதேபோல் பிரசித் கிருஷ்ணா மற்றும் முகேஷ் குமார் இருவரில் யாரை தேர்வு செய்வது என்பதும் கடினமான ஒன்று தான்.
கடந்த சுற்றுப்பயணத்தின் போது கேஎல் ராகுல் இதே மைதானத்தில் சதம் விளாசி இருக்கிறார். அதேபோல் பிட்ச் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் விளக்கமாக கேட்டு அறிந்துள்ளேன். அப்போது இருவரும் பிட்சின் தன்மை குறித்தும், இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கமாக கூறினார்கள். அதனால் பிரசித், முகேஷ் இருவரும் வித்தியாசமான பவுலர்கள்.
பிட்சித் கிருஷ்ணாவால் நல்ல உயரத்தில் ஹார்ட் லெந்தில் வீசி, பிட்சின் உதவியை பெற முடியும். முகேஷ் குமார் இதுவரை கிடைத்த அத்தனை வாய்ப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால் ஆடுகளத்திற்கு ஏற்ப வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்திய அணியின் பவுலிங்கை பொறுத்தவரை பும்ரா மற்றும் சிராஜ் ஏற்கனவே இருக்கிறார்கள். அதனால் 75 சதவிகித பணிகள் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள 25 சதவிகித பணிகளை தான் ஆலோசனை மேற்கொண்டு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

