இரண்டாவது முறையாக இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை தொடரில் தற்போது சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது.
இந்த போட்டி குறித்து சில முக்கிய கருத்துகளை பேசிய விராட் கோலி தனது எதிர்கால கிரிக்கெட் குறித்தும் சில தகவல்களை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக இந்த போட்டியில் ஒன்பது ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் வெளியேற, இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மோசமான பேட்டிங் பார்ம் வெளிப்படுத்தி வந்த விராட் கோலி சூழ்நிலையை அறிந்து ஒரு முனையில் நங்கூரமாக நின்று விட்டார்.
தொடக்க ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அற்புதமாக விளாசிய பின் ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேற, அதன் பிறகு ஆங்கர் ரோலை கையில் எடுத்தார். முதலில் நிதானமாக விளையாடினாலும் அதற்கு பின்னர் அதிரடியாக ரன்களை குவித்து 59 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு சவாலான ஸ்கோரை நிர்ணயித்தார். எப்போதும் அழுத்தமான தருணங்களில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராட் கோலி இந்த முறையும் அதை தவறவிடவில்லை.
இதனாலே இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி குறித்து விராட் கோலி கூறும் போது “இது உண்மையிலேயே உணர்ச்சிகரமான தருணம். இதுதான் எனது கடைசி டி20 உலக கோப்பை தொடர். எனது கடைசி டி20 போட்டியும் இதுதான். இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கவே நான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். இறைவன் என் மீது கருணை கொண்டவராக இருந்திருக்கிறார்.
எனக்கு இதுபோல மற்றொரு சிறப்பான தருணம் அமைய வாய்ப்பில்லை. நாங்கள் இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல விரும்பினோம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் இந்த போட்டியில் தோற்றே இருந்தாலும் இந்த போட்டிக்குப் பிறகு நான் எனது ஓய்வை அறிவித்திருப்பேன். அடுத்த தலைமுறை வீரர்கள் டி20 கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க:ஒரே நாளில் இது நடக்கல.. 4 வருஷமா கடுமையாக உழைத்தோம்.. இந்த வெற்றிக்கு இவங்கதான் காரணம்- ரோஹித் பேட்டி
ஐசிசி தொடர் உலக கோப்பையை கைப்பற்றுவதற்கு நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். ரோஹித் சர்மாவிற்கு இது ஒன்பதாவது உலகக்கோப்பை போட்டி எனக்கு இது ஆறாவது உலகக் கோப்பை. இந்த நேரத்தில் இவர்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம். எங்களுக்கு ஒரு அற்புதமான நாளாக அமைந்திருக்கிறது. நான் அனைத்திற்கும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்” என்று விராட் கோலி கூறியிருக்கிறார்.

