டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நாக் அவுட் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன் எடுத்த நிலையில் வெளியேற, மற்றொரு வீரரான சஞ்சு சாம்சன் இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளையாடிய இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 45 பந்துகளில் 97 ரன்கள் குவித்தது. இதில் இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய சிவம் துபே 19 பந்துகளில் 43 ரன்கள் குவிக்க, கேப்டன் சூர்யா 11 ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், 42 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 89 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலமாக இந்திய அணி 20 ஓவர்களில் 253 ரன்கள் குவித்து நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்கிற வரலாற்றுச் சாதனையை படைத்தது. தற்போது இங்கிலாந்து அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

