ஆப்கானிஸ்தான் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு ஜர்தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்கிறார். விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த போட்டியில் விளையாடவில்லை. இதனால் திலக் வர்மா ஒன் டவுனில் களமிறங்குகிறார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ஓரளவு சிறப்பான துவக்கம் அமைந்தது. 50 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது ஆப்கானிஸ்தான் அணி.
அந்த அணியின் விக்கெட் கீப்பர் குர்பாஸ் 23 ரன்களில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். கேப்டன் ஜர்தார் 22 பந்துகளில் 25 ரன்கள் குவித்து இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து டுபேவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி ஓரளவு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. பிறகு இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய நபி 27 பந்துகளில் 42 ரன்கள் குவித்து மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரிகளுடன் ஆட்டம் இழந்தார்.
நஜிபுல்லா 11 பந்துகளில் 19 ரன்கள் குவித்தார். இதனால் ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. இந்திய அணித் தரப்பில் முகேஷ் குமார் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் ஆல்ரவுண்டர் சிவம் தூபே ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
159 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 0 ரன்களில் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கில் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 23 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
ஒன் டவுனில் களமிறங்கிய திலக் வர்மா 22 பந்துகளில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர்களுடன் 26 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சிவம் தூபே தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவருக்கு கம்பெனி கொடுத்த விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் ஷர்மா அதிரடியாக விளையாடி 31 ரன்கள் குவித்தார்.
சிறப்பாக விளையாடிய சிவம் தூபே 40 பந்துகளில் 5 பவுண்டரி, இரண்டு சிக்சர்களுடன் 60 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ரிங்கு சிங் 9 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் 16 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 17.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

