ஐபிஎல் தொடர் வருகிற 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என ரசிகர்கள் ஆருடம் கூறி வருகின்றனர்.
17-வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தற்போது மிக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
எனவே இப்போட்டிக்காக அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், சென்னை அணி ரசிகர்கள் சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆப் செல்லாது என்று கணித்து வருகின்றனர். இதற்கு காரணம், கொல்கத்தா அணி வீரர் ஜசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதே என்று கூறுகின்றனர்.
அவர் விலகுவதற்கும், சென்னை அணி பிளே ஆப் செல்லாது என்பதற்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால் அவர் எப்போதெல்லாம் தொடரிலிருந்து விலகுகிறாரோ அப்போதெல்லாம் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. எடுத்துக்காட்டாக 2020 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய ஜேசன் ராய், தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
அந்த வருடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு குஜராத் அணியில் இடம் பெற்றிருந்த ராய் அப்போதும் சில காரணங்களுக்காக விளங்குவதாக அறிவித்தார். அதே வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனிக்கு பதிலாக ஜடேஜாவை கேப்டனாக நியமித்தது. அந்தத் தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் பலமான உதை வாங்கியது என்றுதான் கூற வேண்டும்.
அதன் பின்னர்தான் தொடரின் பாதியில் இருந்து எம்.எஸ். தோனியே மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்று அணியை சற்று நிமிர வைத்தார். அதற்குப் பின்னர் தற்போதும் ஜேசன் ராய் விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் இந்த சீசனிலும் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போய்விடுமோ? என்று அச்சமடைந்து ரசிகர்கள் மீம்ஸ் வாயிலாக தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதில் இன்னொரு விசித்திரமான விஷயம் என்னவென்றால், ராய் எப்போதெல்லாம் தொடரில் இருந்து விலகுகிறாரோ அப்போதெல்லாம் அவர் பங்கு பெற்றிருக்கும் அணி இறுதிப் போட்டியை அடைந்து விடுகிறது. 2020 ஆம் ஆண்டு வெளியேறிய போது டெல்லி அணி இறுதிப் போட்டி வரை வந்தது.
அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு குஜராத் அணியில் இடம் பெற்றிருந்த இவர், அந்தத் தொடரில் இருந்து வெளியேறிய பிறகு குஜராத் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. எனவே ரசிகர்களின் இந்த மீம்ஸ்களை பொய்யாக்கும் வகையில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

