2010ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனை நினைவு கூறும் வகையில் மகேந்திர சிங் தோனியை மனோஜ் திவாரி புகழ்ந்து பேசியபோது ஹர்பஜன் சிங் டென்ஷனான சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
15 வருடங்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் 15வது ஆண்டு தினம் நேற்று ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக சென்னை அணி ரசிகர்கள் மீம்ஸ்களை பரப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. சிறப்பாக பேட்டிங் செய்து சுரேஷ் ரெய்னா 37 பந்துகளில் 56 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதற்குப் பிறகு களம் இறங்கிய மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வி சந்தித்தது.
அப்போ போட்டியின் இறுதிக்கட்டத்தில் சென்னை அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்திய பொல்லார்டு 10 பந்துகளில் இரண்டு பௌண்டரிகள் மூன்று சிக்சர்கள் என 27 ரன்கள் குவித்து சென்னை அணியை அச்சுறுத்தி விட்டு கடைசியில் ஆட்டம் இழந்தார். அந்தப் போட்டியில் பொல்லார்டுக்கு மகேந்திர சிங் தோனி பீல்டிங் செட் செய்த விதம் இன்று வரையில் ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டியை நினைவு கூறும் வகையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பில் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மனோஜ் திவாரி அப்போட்டியில் ‘மகேந்திர சிங் தோனி 15 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். அதுவும் ஒற்றை கையால் அவர் அடித்த சிக்சர் இன்றளவும் நினைவில் உள்ளது’ என்று புகழ்ந்தார்.
அப்போது கடுப்பான ஹர்பஜன் சிங் “மகேந்திர சிங் தோனி அந்த போட்டியில் ஸ்பெஷலாக எதையும் செய்துவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த போட்டியில் பொல்லார்டு சிறப்பாக விளையாடி சில சிக்ஸர்களை அடிப்பார். ஒற்றை கையில் சிக்சர் அடிப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது. இது எல்லாம் போட்டியிலும் சாதரணமாக நடப்பது தான்” என்று கூறி இருந்தார்.
எனவே ஹர்பஜன் சிங் இந்த கருத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அணி மீதும் சென்னை ரசிகர்களின் மீதும் அன்பு கொண்ட ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்து அனைவரையும் உற்சாகப்படுத்துவது வழக்கம். மேலும் அந்த ஆண்டில் ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

